2019-செப்டம்பர் 12ம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் பாசங்கரை சாமியார் பார்க்க கூட்டம் கூட்டமாக வந்து சென்றனர். சிவகங்கை மாவட்டமே பரபரப்பாக இருந்தது. நான் ஜீவசமாதி அடையப்போகிறேன் என போஸ்டரைப் பார்த்த மக்கள் பாசாங்கரை சாமியாரை பார்க்க உணவுப் பொருட்கள், பணம், நகைகளுடன் வண்டி கட்டி வந்தனர். அப்போதைய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உட்பட பலரும் அருள் ஆசிபெற்றனர். ஆனால் அவர் ஜீவசமாதி அடையாமால் தவிர்த்தது, பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இருளப்பசாமியின் மகன் உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இருளப்பசாமி மீண்டும் ஜீவசமாதி அடைய உள்ளேன் என தெரிவித்துள்ளது. சிவகங்கையில் சூட்டை கிளப்பியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சக்கந்தியை அடுத்த பாசங்கரை பகுதியைச் சேர்ந்தவர் தான் இருளப்பசாமி. சிறுவயதில் இருந்தே சிவன் மீது பற்று கொண்டு சிவபெருமானை வணங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. வீடு, விவசாயம் நிலங்கள், குடும்பம் என அனைத்தும் இருந்தாலும் சிவபெருமானின் மீது உள்ள பற்றால் தன்னை சாமியாரக அறிவித்துக் கொண்டு சிவ பூஜை செய்து வந்துள்ளார். வயது மூப்பின் காரணமாக உடல் நிலை கோளாறு ஏற்படவே வீட்டில் படுத்த படுக்கையாகிவிட்டாராம்.
இந்த சூழலில் இரவு உறக்கத்தில் கனவு ஏற்பட்டு சிவபெருமான் "உன்னை முழுமையாக அற்பணித்துக் கொள்" என கூறியதகாக இருளப்பசாமி தெரிவித்தார். இதனால் 2019 செப்டம்பர் மாதம் 12-ம் தேதி அதிகாலை 12 மணி முதல் 5 மணிக்குள் ஜீவசமாதி அடைந்துடவேண்டும் எனவும் தெரிவித்தாக கூறி இருளப்பசாமி ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டினர். இதனால் 2019- செப்டம்பர் மாதம் துவக்கத்திலேயே பக்தர்கள் கூட்டம் எண்ணில் அடங்காமல் குவிந்தது. பக்தர்கள் பழங்கள் உணவுப் பொருட்கள், பணம், ஆபரணங்கள் என ஏகப்பட்ட பொருட்களை கொண்டு வந்து கொடுத்தனர்.
அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனும் நேரில் வந்து ஆசிபெற்றார். ஜீவசமாதி அடையப்போகிறேன். என்று கூறிய தேதியன்று இருளப்பன் ஜீவசமாதி அடையவில்லை. இதனால் வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். இது தொடர்பாக இருளப்பசாமியின் மகன் உட்பட, அவரின் ஆதரவாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் பாசாங்கரை இருளப்பசாமி 2 வருடங்களுக்கு பின் என்ன செய்கிறார் என தெரிந்துகொள்ள அவரின் தோட்டத்து வீட்டிற்கு சென்று பார்த்தோம்.
நம்மிடம் பேசுகையில்.., "கடந்த முறை ஜீவசமாதி ஏற்கும் போது கேரள மாந்திரிகர் சிலர் அதனை தடுவிட்டனர் அதனால் என்னால் ஜீவசமாதி அடையமுடியவில்லை. தற்போது வரும் சித்திரா பெளர்ணமி அன்று கண்டிப்பாக ஜீவசமாதி அடைந்துவிடுவேன். வரும் சித்திரை ஒன்று வியாழன், வெள்ளி, சனிக்கிழமை மூன்று நாட்களுக்குள் கண்டிப்பாக ஜீவசமாதி அடைவேன். கடந்த முறை சொன்னது போல நல்ல மழை பொழிவு ஏற்பட்டு விவசாயம் செழித்துள்ளது. அதே போல் கரோனா என்ற நோயும் ஏற்பட்டுள்ளது. நான் ஜீவசமாதி அடைந்த பின் இவை முற்றிலுமாக நீங்கும். நான் ஜீவசமாதி அடைந்த இடத்தில் வேண்டுதல் செய்தால் நிறைவேறும். குழந்தை பாக்கியம், உடல் சுகம் என அனைத்தும் கிடைக்கும்" என்றார்.
கடந்த முறை போஸ்டர் ஒட்டி ஜீவசமாதி அடையப்போகிறேன் என இருளப்பசாமி தெரிவித்திருந்த நிலையில் அதனை கைவிட்டார். இந்நிலையில் மீண்டும் ஜீவசமாதி அடையப்போகிறேன் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.