தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. ஆளுநரின் இச்செயலுக்கு பல கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து முடிவெடுக்க சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி, தலைமைச் செயலகத்தில் இன்று காலை கூடிய சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக பங்கேற்காத நிலையில், காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட 10 கட்சிகள் பங்கேற்றன. இக்கூட்டத்தில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற தீர்மானம் இயற்றப்பட்டது.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்த நிலையில், இக்கூட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக பங்கேற்காததற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி பொதுமக்களை ஏமாற்றத்துடிக்கும் ஓ.பன்னீர் செல்வத்தின் செயல் கண்டனத்திற்குரியது. அதிமுகவும் பாஜகவும் கூச்சமின்றி நாடகத்தைத் தொடர்கின்றன" என்றார். மேலும், திமுக ஆட்சி இருந்தவரை நீட் தமிழகத்திற்குள் நுழையவில்லை என தெரிவித்த துரைமுருகன், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, பாஜக நாடகத்திற்கு தமிழக மக்களும் மாணவ சமுதாயமும் இணைந்து பதிலடி கொடுக்கும்" என்றார்.