திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்கள் பதிவு செய்வதற்கு இடைத்தரகர்கள் மூலம், அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகத் தொடர்ந்து வந்த புகாரையடுத்து, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையில் ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் அலுவலகத்திற்குள் நடமாடிய நபர்களையும் அவர்கள் கொண்டு வந்த உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து முப்பது ஆயிரம் பணம், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்தபோது, அப்பகுதியில் உள்ள நகல் எடுக்கும் கடை ஒன்றில் ஆவண எழுத்தர் ஆகப் பணி புரியும் ஊழியர் ஒருவர் அதிகாரிகளைக் கண்டு மிரண்டு போய் தான் வைத்திருந்த பணத்தை மதில் சுவர் வழியாக அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வீசினார்.
இதனைக் கண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அந்த பணத்தைக் கைப்பற்றிச் சம்பந்தப்பட்ட ஊழியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதே சமயம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது கட்டிடத்தின் மேற்கூரிலிருந்து திடீரென மூன்று அடி நீளம் உள்ள கட்டு விரியன் பாம்பு ஒன்று கீழே விழுந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.