நாகூரில் காவல்துறையின் கண்ணில் மண்ணைத் துவி பல ஆண்டுகளாக கண்ணாமூச்சி காட்டி லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்களைக் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து ஒன்றரை லட்சம் பணம், இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாட்டரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
நாகை மாவட்டம், நாகூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தன. லாட்டரி சீட்டு மோகத்தில் கூலித் தொழிலாளர்கள் பணத்தை இழந்து பரிதவித்து வருவதாகவும், இதனைத் தடுக்க வேண்டுமென அப்பகுதி சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்குத் தொடர்ந்து புகார்கள் அளித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தலைமையிலான தனிப்படை போலீசார், நாகூர் தர்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட தெத்தி சமரசம் நகரைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், நாகூர் தெத்தி பகுதியில் அச்சிடப்பட்ட லாட்டரி சீட்டுகள் பதுக்கி வைத்துள்ளதாகவும், அங்கு ஏஜென்ட் பதுங்கி இருப்பதாக போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள ‘நல்ல நேரம்’, ‘குமரன்’, ‘விஷ்ணு’ என்ற பெயரில் அச்சிடப்பட்ட லாட்டரி சீட்டுகளையும், ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் காவல்துறையின் கண்ணில் மண்ணைத் துவி பல ஆண்டுகளாக கண்ணாமூச்சி காட்டி வந்த லாட்டரி சீட்டு அச்சிட்டு விற்பனை செய்து வந்த பிரபல ஏஜெண்டுகளான திருவாரூரைச் சேர்ந்த முருகன் அவரது கூட்டாளி ஜெய்லானி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார் நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நாகூரில் "நல்ல நேரம்" லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்த பிரபல ஏஜெண்டுகள் பிடிபட்ட சம்பவத்தில், சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீசாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் பாராட்டி வாழ்த்தும் தெரிவித்தார்.