Skip to main content

வேட்பாளரின் பணமா? வியாபாரி கடத்தலின் பின்னணியை மறைத்த போலீஸ்...!

Published on 02/05/2019 | Edited on 02/05/2019

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த மேலாரணி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். அதே ஊரில் மரசெக்கு வைத்து எண்ணெய் உற்பத்தி செய்து தரும் வேலை செய்து வருகிறார். கலசப்பாக்கம், போளுர், புதுப்பாளையம் பகுதிகளில் உள்ள நிலங்களில் உள்ளுர், வெளியூரை சேர்ந்தவர்கள் பல தரப்பினரும் வந்து சீட்டு ஆடுவது வழக்கம். லட்சங்களில் பணம் வைத்து சீட்டுக்கட்டு விளையாடுகிறார்கள்.

 

saravanan


சரவணன் சீட்டு விளையாடுவார், கலசப்பாக்கம் பகுதிகளில் சீட்டு விளையாட செல்லும்போது, அங்கு சீட்டு விளையாட வரும் திருவண்ணாமலை புதுத்தெருவை சேர்ந்த அப்துல்அலி என்பவரின் 30 வயதான அன்சர்அலி பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சில ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக வலம் வந்துள்ளனர்.



இந்நிலையில் ஏப்ரல் 28ந் தேதி மதியம் திருவண்ணாமலை சென்று வருவதாக குணவதியிடம் கூறிவிட்டு சென்ற சரவணன் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண் சுச்-ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இது தொடர்பாக கலசப்பாக்கம் காவல்நிலையத்தில் ஏப்ரல் 29ந் தேதி புகார் தந்துள்ளார் குணவதி.



30ந் தேதி மதியம் குணவதியின் செல்போன் எண்ணுக்கு தொடர்புக்கு கொண்ட ஒருவர், உன் கணவனை கடத்திவைத்துள்ளோம், அவனை விடவேண்டும் என்றால் ரூ. 50 லட்சம் பணம் தரவேண்டும் எனச்சொல்லி செங்கம் அருகே உள்ள புதூர் மாரியம்மன் கோயில் அருகே வரச்சொல்லியுள்ளார்கள். இந்த பெண்மணியும் 15 லட்ச ரூபாய் பணத்தோடு சென்று காத்திருந்துள்ளார்.



டி.என்.25 பி8181 என்கிற இன்னோவா காரில் வந்த இருவர் பணத்தை வாங்கிக்கொண்டு, இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் வீட்டுக்கு வருவார் எனச்சொல்லிவிட்டு சென்றுள்ளனர். அவர்கள் சென்ற ஒரு மணி நேரத்தில் மீண்டும் போன் செய்து ரூ 25 லட்சம் வேண்டும் என டிமாண்ட் செய்துள்ளார் ஒருவர். இதில் அதிருப்தியான குணவதி, தான் பணம் தந்தது, அவர்கள் பேசிய செல்போன் எண், பணம் வந்து வாங்கி சென்றவர்களின் கார் பதிவு எண் போன்றவற்றை காவல்துறையிடம் கூறியுள்ளார்.

 

saravanan


திருவண்ணாமலை எஸ்.பி., சி.பி.சக்கரவர்த்தி, டி.எஸ்.பி-கள் அண்ணாதுரை, குற்றாலலிங்கம் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனித்தனி டீம்கள் அமைக்கப்பட்டன. செல்போன் எண்கள், வண்டி எண்ணை வைத்து முகவரி, அந்த வாகனங்கள் சென்ற வழி, சிசிடிவி கேமரா என சோதனை செய்து வந்தனர். அதோடு, அவர்கள் கேட்ட தொகை செங்கம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் கொண்டு வந்து தரும்படி குணவதியிடம் கூறியுள்ளனர். அவரும் மே 1ந் தேதி பணத்தோடு அங்கு நின்றுள்ளார். அவரை சுற்றி மப்டியில் போலீஸார் இருந்துள்ளனர். டி.என் 25 பி.எல் 0023 என்கிற எண்ணுடைய காரில் ஒருவர் வந்து குணவதியிடம் பேசி பணம் வாங்கும்போது, மப்டியில் இருந்த போலீஸார் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். அவர் அன்சர் அலி என தன்னைப்பற்றி கூறியுள்ளார்.
 


அவர் தந்த தகவலின்பேரில் வேட்டவலம் அருகே சரவணனை அடைத்துவைத்திருந்ததை கண்டறிந்து காப்பாற்றினர் போலீசார். கடத்தி வைத்து இருந்த முஸ்தபா, தஸ்தகீர், இந்தியாஸ், துரைப்பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார்கள், 6 செல்போன்கள், கத்தி போன்றவற்றையும், 15 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக செய்தியாளர்களிடம் எஸ்.பி., சி.பி. சக்கரவர்த்தி தெரிவித்தார்.
 


இதில் போலீஸார் மறைத்த தகவல்கள் இது என அரசியல் வட்டாரத்தில் கூறுவது. அந்த பணம் திருவண்ணாமலை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளருடையது. அவர் சரவணனிடம் தேர்தலின்போது, ஓட்டுக்காக தந்துவைத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த பணம் பற்றி தனது நண்பர் அன்சர்அலியிடம் கூறியுள்ளார். தேர்தல் செலவுக்கு தந்தது போக மீதி பணம் என்னிடம் தான் உள்ளது எனக்கூறியுள்ளார். அதனை தெரிந்துக்கொண்டே சரவணனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர். இதனை வெளியே சொல்லாமல் போலீஸ் மறைத்துள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
 


கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான கடத்தல் கும்பலில் இருந்த முஸ்தபா என்பவர், திருவண்ணாமலையில் பிரபலமான ஒரு மசூதியின் நிர்வாக குழு உறுப்பினராக இருந்துள்ளார். அவரின் குற்றச்செயல்களை அறிந்த ஜமாத்தினர், இது தொடர்பாக கேள்வி எழுப்ப சமீபத்தில் தான் அவரை பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளனர்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்