குமாி மாவட்டத்தில் பிரசித்த பெற்ற விழாக்களில் ஒன்று சிவபக்தா்கள் ஓடும் சிவாலய ஓட்டம். ஆண்டுத்தோறும் நடக்கும் இந்த விழா கல்குளம், விளவங்கோடு தாலுக்காக்களில் இருக்கும் முன்சிறை திருமலை மகாதேவா், திக்குறிச்சி மகாதேவா், திற்பரப்பு வீரபத்திரா் கோவில், திருநந்திகரை நந்தீஸ்வரா் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவா் கோவில், பந்நிபாகம் சந்திர மவுலீஸ்வரா் கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு காலகாலா் கோவில், திருவிடைக்கோடு சடையப்ப நாதா்கோவில், திருவிதாங்கோடு மகாதேவா் கோவில், திருபன்றிகோடு மகாதேவா் கோவில் திருநட்டாலம் சங்கரநாராயணனாா் கோவில் ஆகிய 12 சிவன் கோவில்களுக்கு சிவாலயம் ஓடுகின்றனா்.
திருமலை கோவிலில் இருந்து ஓட்டத்தை தொடங்கும் பக்தா்கள் கால்நடையாக 110 கிமீ தூரம் நடந்து திருநட்டாலம் கோவிலில் ஓட்டத்தை முடிக்கின்றனா். பகல் இரவு தூங்காமல் கால் நடையாகவும் கோவிந்தா.... கோபாலா.... என்ற கோஷத்துடன் காவி உடையணிந்து கையில் விசிறியுடன் செல்கின்றனா். இவா்களுடன் பைக், ஆட்டோ, காா், வேன்களிலும் பக்தா்கள் குடும்பம் குடும்பமாக செல்கின்றனா்.
சிவாலயம் ஓடும் பக்தா்களுக்கு 12 கோவில்களிலும் விபூதி பிரசாதமாக வழங்கப்படும். அந்த பிரசாதத்தை இடுப்பில் வைத்தியிருக்கும் சுருக்கு பையில் நிறைக்கின்றனா். இந்த பக்தா்களுக்கு வழி நெடுகிலும் கஞ்சி, கிழங்கு, பழம், மோா், பானகம், தா்பூசணி, இட்லி ஓவ்வொரு ஊா் மற்றும் அந்த பகுதிகளில் இருக்கும் கோவில்களில் வழங்குகின்றனா்.
ஆரம்ப காலங்களில் உள்ளுா் மக்களால் மட்டும் ஓடி வந்த இந்த சிவாலய ஓட்டம் தற்போது குமாி மாவட்டம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஆயிரகணக்கான பக்தா்கள் விரதமிருந்து சிவாலயம் ஒடுகின்றனா். இதனால் ஆண்டுத்தோறும் பக்தா்களின் கூட்டம் அதிகாித்து கொண்டே செல்கிறது. சிவாலய ஓட்டத்தினால் பக்தா்கள் செல்லும் வழிதடங்களில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுதால் அதை சமாளிக்க போலீசாரும் போடப்பட்டுள்ளனா். மேலும் இதற்காக அரசு சிறப்பு பேருந்துகளும் இயக்குகின்றன.
சிவாலய ஓட்டத்தையொட்டி இன்று குமாி மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை விடபட்டுள்ளது.