குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க இந்து விழாக்களில் ஒன்று சிவபக்தர்கள் ஒடும் சிவாலய ஓட்டம். ஆண்டுத்தோறும் நடக்கும் இந்த விழா கல்குளம், விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் தாலுக்காக்களில் இருக்கும் முன்சிறை திருமலை மகாதேவர், திக்குறிச்சி மகாதேவர், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திகரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவர் கோவில், பந்நிபாகம் சந்திர மவுலீஸ்வரர் கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு காலகாலர் கோவில், திருவிடைக்கோடு சடையப்ப நாதர்கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருபன்றிகோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கரநாராயணனார் கோவில் ஆகிய 12 சிவன் கோவில்களுக்கு சிவாலயம் ஓடுகின்றனர்.
திருமலை கோவிலில் இருந்து ஓட்டத்தை தொடங்கிய பக்தர்கள் கால்நடையாக 110 கிமீ தூரம் நடந்து திருநட்டாலம் கோவிலில் ஓட்டத்தை முடிக்கின்றனர். பகல் இரவு தூங்காமல் கால் நடையாகவும் 'கோவிந்தா....கோபாலா' என்ற கோஷத்துடன் காவி உடையணிந்து கையில் விசிறியுடன் செல்கின்றனர். இவர்களுடன் பைக், ஆட்டோ, கார், வேன்களிலும் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக செல்கின்றனர்.
இதற்காக ஏகாதசி அன்று கழுத்தில் மாலை அணிவித்து விரதம் இருந்து காலை மாலை இரண்டு வேளைகளிலும் குளித்து சாமி தரிசனம் செய்வதோடு இயற்கை உணவுகளை உட்கொள்வது வழக்கம். சிவாலயம் ஒடும் பக்தர்களுக்கு 12 கோவில்களிலும் விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது. அந்த பிரசாதத்தை இடுப்பில் வைத்திருக்கும் சுருக்கு பையில் நிறைக்கின்றனர். இந்த பக்தர்களுக்கு வழி நெடுகிலும் கஞ்சி, கிழங்கு, பழம், மோர், பானகம், தர்பூசணி, இட்லி ஒவ்வொரு ஊர் மற்றும் அந்த பகுதிகளில் இருக்கும் கோவில்களில் வழங்குகின்றனர்.
ஆரம்ப காலங்களில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளுர் மக்களால் மட்டும் ஓடி வந்த இந்த சிவாலய ஓட்டம், தற்போது நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளாவில் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் விரதமிருந்து சிவாலயம் ஓடுகின்றனர். இதனால் ஆண்டுத்தோறும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே செல்கிறது. சிவாலய ஓட்டத்தினால் பக்தர்கள் செல்லும் வழிதடங்களில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுவதால் அதை சமாளிக்க போலீசாரும் போடப்பட்டுள்ளனர். மேலும் இதற்காக அரசு சிறப்பு பேருந்துகளும் இயக்கியுள்ளது. சிவாலய ஓட்டத்தையொட்டி இன்று (1-ம் தேதி) குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.