Skip to main content

ஜனவரி 15, 16, 17 இல் கடற்கரைகள், பூங்காக்களில் அனுமதி இல்லை - தமிழக அரசு அறிவிப்பு!

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

beaches, parks tamilnadu government announced

 

ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் கடற்கரைகள், பூங்காக்களில் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. 

 

இந்த நிலையில், காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூடுவதால் கரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் (16.01.2021) பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அண்ணா உயிரியியல் பூங்கா, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்துச் சுற்றுலா இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள கிண்டி தேசியப் பூங்காவிலும், மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கரோனா நோய்த் தொற்றுப் பரவும் அபாயம் உள்ளதைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக இதனைத் தடுக்கும் வகையில், மேற்கண்ட அனைத்து இடங்களிலும் 15.01.2021, 16.01.2021 மற்றும் 17.01.2021 ஆகிய நாட்களில் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 

 

கரோனா நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களின் நலன் கருதி, தமிழக அரசு எடுத்துவரும் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை வழங்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்