திருச்சி பெல் தொழிற்சாலையில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் சுமார் 30,000 பேர் உரிய மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள். இது தொடர்பாக பெல் தொழிற்சங்கத் தலைவர் நடராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
"தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின்னரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று ஊழியர்களின் பங்களிப்போடு உருவாக்கப்பட்டது தான் பெல் மருத்துவமனை, இந்த பெல் மருத்துமனையில் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் மற்றும் அவரது மனைவிக்குச் சிகிச்சை அளிக்கப்படும் என்பது விதிமுறையாகும்.”
“ஆனால் கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பெல் ஓய்வு பெற்ற ஊழியர்களை மருத்துமனைக்கு உள்ளே அனுமதிப்பது இல்லை. நுழைவுவாயிலிலேயே நிறுத்தி புறநோயாளிகள் போன்று மருந்து மட்டுமே வழங்கி வருகிறார்கள்.”
மருத்துவர்களுக்குக் கரோனா தொற்று பயம் இருந்தால் அவர்கள் பாதுகாப்புக் கவசங்கள் அணிந்து கொண்டு, நோயாளிகளைத் தகுந்த இடைவெளியில் நிற்க வைத்துச் சிகிச்சை அளிக்க வேண்டும். மாநில அரசு மற்றும் ரெயில்வே மருத்துமனைகளில் இது போன்று தான் நோயாளிகளைப் பரிசோதனை செய்து மருந்து வழங்குகிறார்கள்.”
இதனைப் போன்று பெல் மருத்துமனையிலும் ஓய்வு பெற்ற பெல் ஊழியர்களுக்குச் சிகிச்சை அளிக்க பெல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையின் வழியாகக் கோரிக்கை வைத்துள்ளனர்.