கடந்த வருடம், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து, ‘பொதுக்குழு செல்லாது’ என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. மேலும், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக வேட்பாளரைத் தேர்வு செய்ய அறிவுறுத்தல் ஒன்றையும் கொடுத்திருந்தது. அதன்படி அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்து தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பு குறித்து எடப்பாடி தரப்பு முன்னாள் அமைச்சர்கள் வரவேற்று கருத்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில் அமமுகவின் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''இன்றைக்கு பலாபலன்களுக்காக ஒரு வியாபார நோக்கோடு அங்கே பழனிசாமி பின்னணியில் நிற்பவர்களுக்கு தெரியும். யாரோ ஒரு சிலர் எங்களை விட்டு சுயநலத்தால் பிரிந்து சென்றிருக்கலாம். இருந்தாலும் அமமுக தமிழ்நாடு முழுவதும் கட்டமைப்புள்ள வளர்ந்து வருகின்ற இயக்கமாகத்தான் இருந்து வருகிறது.
ஆர்.கே.நகர் தேர்தலைத் தவிர வேறு எந்த தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறவில்லை என்பது உண்மை. ஆனால் இரட்டை இலை சின்னம் துரோகி கையில் இருந்ததால் உண்மையான ஜெயலலிதா தொண்டர்களுக்கான கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பதை உணர்ந்தும் எங்கள் கட்சிக்கு வர முடியாமல் இருக்கிற தொண்டர்களும் இருக்கிறார்கள். பழனிசாமி ஒரு சுயநலவாதி என்பதை உணர்ந்து வேறு வழியில்லாமல் அங்கே இருப்பவர்கள் எல்லாம் வருங்காலத்தில் எங்களோடு வந்து இணைவார்கள் என்பது உண்மை. அதை காலம் நிரூபிக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு பெரும் பின்னடைவு. மாபெரும் தலைவர்கள் வைத்திருந்த சின்னம் இன்று தவறான ஒரு துரோகிகளின் கையில் இருப்பதால் அந்தச் சின்னம் இன்னும் பலவீனப்படும். எம்ஜிஆர் அவர்கள் துரோகத்திற்கு எதிராக தொடங்கிய இயக்கம் இன்று ஒரு துரோகியின் கையில் மாட்டிக் கொண்டிருக்கிறது என்பதுதான் காலத்தின் கட்டாயம். வருங்காலத்தில் இது சரியாகும்'' என்றார்.