மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கடலூர் சிறை நிரப்புப் போராட்டம், கடலூர் கெடிலம் ஆற்றுக்கரையில் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தோழர் தியாகு, கடலூர் துணை மேயர் வி.சி.க, பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக போராட்டத்தை கடலூர் உழவர் சந்தை பகுதியில் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது. காவல்துறை கடைசி வரை அந்த இடத்தை தர மறுக்க, இறுதியாக ஆற்றுக் கரையில் நடத்த அனுமதி வழங்கியது. ஆரம்பம் முதலே போராட்டக்காரர்கள் உடன் காவல்துறையினர் கெடுபிடியுடனே நடந்து கொண்டு இருந்தனர். காவல்துறை ஆய்வாளர் கவிதா அவர்கள் சற்று வேகமாக மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களை அழைக்க கட்சியின் தொண்டர்கள் காவல்துறை ஆய்வாளர் கவிதா மீது கோபப்பட ஆரம்பித்தனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்.எல்.ஏவுமான வேல்முருகன், “கடந்த வாரம் நடந்த விரும்பத்தகாத ஒரு செயலால் காவல்துறையினில் இறுக்கமான நிலையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதற்காக ஜனநாயக முறையில் நடைபெறும் போராட்டங்களுக்கு இவ்வளவு கெடுபிடி கொடுத்து அக்கட்சியினரிடம் கெடுபிடி காட்டுவது ஏற்புடையது அல்ல என்றும், நாங்கள் ஆளும் கூட்டணி கட்சியில் உள்ளவர்கள் எங்களிடத்திலே காவல்துறை இவ்வளவு கெடுபிடி காட்டுவது தவறு என்றும், இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதுதான் எங்களது நோக்கமாக இருக்கும், இந்தப் போராட்டத்தில் சிறு தவறு நடந்து அதை எங்களது தலைமையிலான கூட்டணி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த விடமாட்டோம் என்று கூறி காவல்துறையினர் போராட்டக்காரர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் “திமுக கூட்டணிக்கு ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி ஒற்றைக் கோரிக்கையோடு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆதரவு கொடுத்தவர் தமிமுன் அன்சாரி. நானும் அவரும் இணைந்து சிறைவாசிகள் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளோம். தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறையில் உள்ள ஆயுள் சிறைவாசிகள், இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, நோயாளிகளான சிறைவாசிகளின் சிகிச்சைக்குக்கூட வழியில்லாத சூழல் உருவாகியுள்ளது. நாங்கள் இஸ்லாமிய சிறைவாசிகளை மட்டும் விடுதலை செய்யச் சொல்லவில்லை. 20 ஆண்டுகள் கழித்த அனைத்து மத, சாதியினரையும் எந்தவித பாரபட்சமில்லாமல் விடுதலை செய்ய சொல்கிறோம். இந்த விடுதலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் உள்ளனர் என மேற்கொள் காட்டினார்.
பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற பல்வேறு தலைவர்கள் பேசியவுடன், அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்ப்புலிகள் விடுதலைக்கட்சி தலைவர் குடந்தை அரசன், தோழர் வெங்கட்ராமன் மற்றும் அக்கட்சியின் மாநில செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.