காவலர் பணிக்கு தேர்ச்சி பெற்று பணியிடம் நிரப்பப்படாத காரணத்தினால் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தலைமைச் செயலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.
2012ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பும் பணியமர்த்தப்படாமல் இருப்பதாகக் கூறி 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்க வந்தனர்.
அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தலைமைச் செயலகத்தின் எதிர்புறம் உள்ள பேருந்து நிலையம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு சிறு சிறு வழக்குகள் இருந்ததால் எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க மறுத்து விட்டதாகவும் ஆனால் தற்போது அந்த வழக்குகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும் தங்களுக்கான பணி நியமன ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் வரை தங்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் அரசிடமே ஒப்படைக்க போவதாகவும் கூறினர். தலைமைச் செயலகம் முன்பாக தர்ணாவில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவர்களை காவலதுறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.