Skip to main content

'ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றவர்களை நேரடியாக ஆசிரியராக அமர்த்த வேண்டும்'-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 03/10/2022 | Edited on 04/10/2022

 

'Those who have won the teacher qualification test should be directly employed as teachers' - Anbumani Ramadoss insists

 

'தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை, போட்டித்தேர்வு நடத்தாமல், நேரடியாக  பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க அரசு முன்வராதது ஏமாற்றம் அளிக்கிறது' என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  9 ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் வாடி வருகின்றனர். இதற்கு அவர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. மாறாக கடந்த 9 ஆண்டுகளாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யாத தமிழக அரசு தான் இதற்கு காரணம் ஆகும். ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றவர்களை அதனடிப்படையில் ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும்; போட்டித் தேர்வுகளை நடத்தக்கூடாது என்ற அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது; அதை தமிழக அரசு ஏற்க மறுப்பது நியாயமற்றது.

 

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் தொடக்கத்தில் 8-ஆம் வகுப்பு வரையிலும், பின்னர் 10-ஆம் வகுப்பு வரையிலும் கல்வி வழங்க மத்திய அரசு நிதி வழங்குகிறது. அதற்காக மத்திய அரசு விதித்த நிபந்தனையின்படி 2012 முதல் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது தான் தகுதி ஆகும். 2012-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதன் தரவரிசை அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அதே நிலையே இப்போதும் தொடர வேண்டும் என்பது தகுதித் தேர்வில் வென்றவர்களின் கோரிக்கை.

 

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் நியமிக்கப்படுவதற்கு போட்டித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற விதி 2018&ஆம் ஆண்டு முந்தைய ஆட்சிக்காலத்தில் தான் திணிக்கப்பட்டது. 2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வெயிட்டேஜ் முறை கொண்டுவரப்பட்டது. அதற்கு பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதைத் தொடர்ந்து வெயிட்டேஜ் முறையை ரத்து செய்த தமிழக அரசு, அதற்கு மாற்றாகத் தான் 20.07.2018 -தேதியிட்ட 149 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் போட்டித் தேர்வை கொண்டு வந்தது.

 

அதாவது ஒருவர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால், அவர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றவர் ஆவார்; ஆனால், ஆசிரியர் பணி அவரது உரிமை இல்லை; அதற்கு அவர் போட்டித் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பது தான் அரசாணை 149-இன் பொருள் ஆகும். 2018-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை இப்போது தான் முதன்முறையாக செயல்படுத்தப்படுகிறது. ஒரே பணிக்கு  இரு தேர்வுகளை நடத்துவது அந்தத் தேர்வுகளையே சந்தேகிக்கும் செயலாகும். இது கூடவே கூடாது.

 

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை விட அதிக ஊதியம் வழங்கப்படும் பணி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி ஆகும்.  அதற்கு ஒரே ஒரு போட்டித் தேர்வு மட்டும் தான் நடத்தப்படுகிறது. அதை விட அதிக ஊதியம் வழங்கப்படும் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றிருந்தால் எந்தத் தேர்வும் இல்லாமல் பணி வழங்கப்படுகிறது. ஆனால், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதலில் தகுதித்தேர்வு, பின் போட்டித்தேர்வு என இரு தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பது  எந்த வகையில் நியாயம்? 2018-ஆம் ஆண்டில் அரசாணை 149 பிறப்பிக்கப்பட்ட போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், இப்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். அவ்வாறு எதிர்க்கப்பட்ட அரசாணையை அவரது அரசு இப்போது செயல்படுத்துவது நியாயமற்றதாகும்.

 

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை போட்டித் தேர்வின் அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்ற அரசாணை தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். எனவே, அரசாணை எண் 149-ஐ செல்லாது என்று அறிவித்து விட்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவரையும் நேரடியாக இடைநிலை & பட்டதாரி ஆசிரியர் பணிகளில் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்