தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தைக் கடந்த 4ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் துவக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அந்தந்த மாவட்டங்களில் மக்களுக்கு நேரடியாக பொங்கல் தொகுப்பை வழங்கினர். இந்தப் பொங்கல் பரிசு தொகுப்பை இந்த மாதம் இறுதி வரை பயனாளர்கள் தங்கள் ரேஷன் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக பொங்கல் பண்டிகையின் காரணமாக ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்ததால், மீண்டும் இன்று முதல் ரேஷன் கடைகளில், மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.