Skip to main content

தண்ணிகாட்டிய கொள்ளையர்கள்... ஃபுல் ஸ்டாப் வைத்த போலீஸ்!

Published on 29/12/2020 | Edited on 29/12/2020

 

Those involved in serial robbery arrested ..!


விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் காவல் நிலைய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன. சில வாரங்களுக்கு முன்பு திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் என்பவரது வீட்டில் 39 பவன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. அதேபோன்று அப்பகுதியில் ஏழு இடங்களில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி வந்துள்ளனர். 


இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் கோட்டகுப்பம் டி.எஸ்.பி. அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் பாலமுருகன், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்ஃபோன் சிக்னல்களை வைத்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து கர்நாடக மாநிலம் மைசூர் மாண்டியா மற்றும் வேலூர் பகுதியில் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கரிக்கலாம்பாக்கம் பாலகிருஷ்ணன் என்கிற ரவிக்குமார், வேலூர் அருகே உள்ள கருகம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்கிற கார்த்திக் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 


அவர்களிடம் இருந்து 55 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், “ஆரோவில் பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த  சமூக விரோதிகள் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப்படும்”  என்றார்.
 

 

 

சார்ந்த செய்திகள்