தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 23 மாவட்டங்களில் கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு மூலம் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 59 பணியிடங்களுக்குப் பல்லாயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பித்தனர். இதற்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அதில் தேர்வானவர்களுக்கு அடுத்து நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டது. இதன் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் பணி ஆணைகள் வழங்கப்பட்டன. ஆனால் இவர்களுக்கான பணி இடங்களை ஒதுக்கவில்லை. பணி ஆணை கிடைக்கப் பெற்றவர்கள் தங்களைப் பணியில் சேர அனுமதிக்க கோரி பலமுறை கூட்டுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டுள்ளனர்.
அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில், சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இனியாவது நமக்கு பணி வழங்குவார்களா? மாட்டார்களா? என்ற பயம் ஏற்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையில் தேர்வு பெற்றவர்கள் நேற்று (22.06.2021) மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்தனர். அப்போது அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கூறும்போது, “எங்களுக்குப் பணி ஆணை வழங்கிய உடனே நாங்கள் கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று எங்களுக்கான பணியிடங்களை ஒதுக்குமாறு கேட்டோம். அப்போது அதிகாரிகள் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால் சில நாட்கள் கழித்துப் பணியில் அமர்த்துவதாக கூறி எங்களை அனுப்பிவைத்தனர். தேர்தல் முடிந்த பிறகு சென்று கேட்டபோது, முழு ஊரடங்கு காரணத்தைக் கூறி எங்களுக்குப் பணியிடம் வழங்காமல் திருப்பி அனுப்பிவிட்டனர்.
ஆனால் ராமநாதபுரம், தர்மபுரி, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் எங்களைப் போன்று தேர்வு பெற்றவர்களுக்குப் பணியிடங்கள் வழங்கப்பட்டு, அவர்கள் மூன்று மாதமாக பணிசெய்து சம்பளமும் பெற்றுவருகின்றனர். ஆனால் எங்களுக்கு மட்டும் பணியாணை வழங்காமல் இழுத்தடிப்பது ஏன் என்று தெரியவில்லை” என முறையிட்டனர். “விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளர் எங்களைப் பணியில் சேர்க்க மறுக்கிறார். எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து நாங்கள் பணியில் சேர அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அவர்களது கோரிக்கையைப் பரிவுடன் கேட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.