தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மாவட்டத்தின் அனைத்து மருத்துவ உபகரணங்களை கொண்ட மல்டிபில் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை.
இந்த மூன்று மாவட்டங்களில் கரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் இங்கே கொண்டுவரப்பட்டு சிறப்பான சிகிச்சையும் தரப்படுகிறது. உயிரை துச்சமாக நினைத்து கரோனா சிகிச்சைகளை மேற்கொள்ளும் டாக்டர்களுக்கு ஈடாக செவிலியர்களும் பணியாற்றி வருகின்றனர். தற்போதைய கரோனா சீஸனில் இவர்கள் அவதாரப் புருஷர்களாகவே மக்களால் பார்க்கப்படுகிறார்கள்.
இப்படி சிகிச்சை மேற்கொள்ளப்படும் டாக்டர்களும், செவிலியர்களும் பாதுகாப்பு கவச உடையணிந்து ஒருவாரம் சிகிச்சை பணியிலிருக்கிறார்கள். பின்பு அவர்கள் சோதனை செய்யப்பட்டு ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அதன்பின் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர்.
அப்படி சிகிச்சை அளித்து திரும்பும் டாக்டர்கள், நர்சுகளுக்கு பொதுமக்கள் தரப்பில் ஏக கெளரவம், வரவேற்புகள் அளிக்கப்படுகின்றன. அவ்வளவு ஏன் அரிதிலும் அரிதான நாட்டை காக்கும் முப்படைகளின் ராணுவ விமானப்படை, இந்தக் காக்கும் தெய்வங்களை மலர்தூவிக் கௌரவிப்பது வரலாற்றுப் பதிவு, அழிக்க முடியாத கல்வெட்டுப் பொறிப்பு.
நெல்லை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் பணிமுடிந்து சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியின் இனாம் மணியாச்சியான தங்களின் கிராமத்திற்கு ரமா ஜெகன்மோகன், சரவணசெல்வி இரண்டு செவிலியர்களும் திரும்பியிருக்கிறார்கள். அவர்களை ஊர் எல்லையில் வரவேற்ற கிராம மக்கள், மாலை அணிவித்து பழங்கள் கொடுத்து வரவேற்றனர்.
இந்த வரவேற்பில் யூனியன் சேர்மன் கஸ்தூரி, வட்டார வளர்ச்சி அதிகாரி மாணிக்கவாசகம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாவதி உள்பட கிராமத்தினர் பங்கேற்றனர்.
‘உயிர் காக்கும் தெய்வங்களுக்கு ராயல் சல்யூட்...’