தூத்துக்குடி என்.ஜி.ஓ. காலனி கணேஷ் நகரைச் சேர்ந்தவர் கதிரேசன். 31 வயதான இவர் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலையில் தூத்துக்குடி மீளவிட்டான் சாலையில் உள்ள, ஒரு காட்டுப்பகுதியில், அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில், பிணமாகக் கிடந்துள்ளார் கதிரேசன் .
இதைப் பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள், சிப்காட் போலீஸ் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, சிப்காட் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விமலா, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலன், சங்கர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்தபோது, காலி மதுபாட்டில்கள் மற்றும் கதிரேசனின் செல்ஃபோனும் கிடந்தன. இதனைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மர்ம கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கதிரேசனை கொலை செய்த கும்பலைக் கண்டுபிடித்தப் பின்னரே கொலைக்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
கதிரேசன் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம், நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.