தன்னுடன் பணிபுரியும் சக பெண் காவலரை ஆபாசமாகப் பேசிய எஸ்.ஐ-யை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது ரயில்வே காவல்துறை.
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தினை சேர்ந்தவர் அந்தப் பெண் போலீஸ். சென்னையில் சக ஆண் காவலருடன் ஏற்பட்ட நெருக்கமான உறவு, வில்லங்கத்தை ஏற்படுத்திய நிலையில் திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் நெல்லை ரயில்வே காவல் நிலையத்தில் எஸ்.ஐயாக பணியாற்றி வந்த சரவணன் என்பவருக்கு இந்தப் பெண் போலீஸின் சென்னை விவகாரம் தெரிய வந்ததால், அதனைக் காரணம் காட்டியே அடிக்கடி அந்தப் பெண்ணிடம் பிளாக் மெயில் செய்யும் நோக்கில் பேசி அசடு வழிந்திருக்கின்றார். தொலைபேசியிலும் ஆபாசமாகப் பேசியிருக்கிறார்.
தன்னிடம் ஆபாசமாகப் பேசிய ஆடியோவினை ஆதாரமாக வைத்து திருச்சி ரயில்வே எஸ்.பி.யிடம் புகார் செய்துள்ளார், அந்தப் பெண் போலீஸ். புகாரைப் பெற்று ரயில்வே போலீஸாரும் மதுரை ரயில்வே டிஎஸ்பி இளங்கோவைக் கொண்டு விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் அறிக்கையை ரயில்வே எஸ்.பி. செந்தில்குமாரிடம் தாக்கல் செய்ய, அறிக்கையின் அடிப்படையில், "நெல்லை சந்திப்பு ரயில்வே எஸ்.ஐ.சரவணனை சஸ்பெண்ட் செய்ய உததரவிட்டதோடு மட்டுமில்லாமல், உடனடியாக அவரது எஸ்.ஐ.கிட்டையும், அடையாள அட்டையையும் திருச்சி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். திருச்சியிலேயே தங்கியிருக்க வேண்டும். வெளியூர் செல்வதாக இருந்தால் உயரதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டுமென" பல நிபந்தனைகளையும் விதித்து உத்தரவிட்டுள்ளார் அவர்.