'ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிட முடியாது' என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதையடுத்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கேவியட் மனுவை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப். நரிமன், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆலை நிர்வாகம் சார்பில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பராமரிப்புக்காக ஆலையை இடைக்காலமாக திறக்க அனுமதி தர வேண்டும். குறைந்த பட்சம் மூன்று மாதத்திற்காவது ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், ஆலையை எக்காரணத்தைக் கொண்டும் திறக்க அனுமதி தர கூடாது என்று வாதிட்டார்.
இதையடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், ஆலை நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்து ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க அனுமதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். மேலும், வழக்கமான நேரடி விசாரணை மேற்கொள்ளும்போது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் கோரிக்கை பற்றி விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.