சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் சித்ரவதை கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்பட 10 காவலர்களை அதிரடியாக கைது செய்த சி.பி.சி.ஐ.டி போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது, அதைத் தொடர்ந்து சி.பி.ஐ.யின் டெல்லி டிடாட்ச்மெண்டின் ஏ.டி.எஸ்.பி. விஜயகுமார் சுக்லா தலைமையிலான ஏழு பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் சாத்தன்குளத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணையின் முதல் நாளான நேற்று (11/07/2020) ஜெயராஜ் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள், ஜெயராஜின் மனைவி மற்றும் மகள்களிடம் சுமார் ஐந்து மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் தந்தை, மகன் சித்ரவதைக் கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமதுரை, செல்லத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய ஐந்து காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.