அனுமதியின்றி போராட்டம் நடத்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மனு தர்ம நூல் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமூக வலைதளத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக அவர் மீது சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மகளிர் குலத்தை இழிவுபடுத்தும் மனுஸ்மிருதியை தடைசெய்ய வலியுறுத்தியும், மனு தர்ம நூலை தடை செய்யக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (24/10/2020) மாலை விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தொல்.திருமாவளவன் எம்.பி., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உட்பட 250 பேர் மீது அரசின் உத்தரவு மீறல், தொற்று நோய் பரவல் சட்டம், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.