கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் அண்ணா திராவிடர் கழக பொது செயலாளர் திவாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , கொடநாடு கொலை வழக்கில் முதல்வருக்கு தொடர்புடையதாக வந்துள்ள குற்றச்சாட்டை நான் முழுமையாக பார்க்கவில்லை, தெகல்கா எதன் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை சொல்கிறார்கள் என தெரியவில்லை ஆனால் அதனை நிரூபிக்க வேண்டிய கடமை அந்த ஊடகத்திற்கு உள்ளது என தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என கூறிய அவர், எத்தனை சக்தி வாய்ந்த மனிதர்களாக இருந்தாலும், உண்மையை மறைக்க முடியாது எனவும் இந்தியாவில் குற்றம்செய்த எத்தனையோ முதல்வர்கள் சிறையில் இருந்திருக்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினார். கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிலர் கைது செய்துவிட்டதால், அந்த வழக்கு முடிந்துவிட்டது என சொல்லிவிட முடியாது எனவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தொடர் கொலை ஏற்பட்டதோடு தற்போது முதல்வர், துணை முதல்வர் மற்றும் டி.டி.வி தினகரன் பெயர்கள் அடிபடுவதால், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் எல்லாவற்றுக்கும் உடனடியாக பதில் அளிகும் தினகரன் இந்த விவகாரத்தில் பதில் அளிக்காமல் இருப்பது சந்தேகம் ஏற்படுத்துவதாகவும் கூறினார்.
ஜெயலலிதா இறப்பதற்கு 5 ஆண்டுகள் முன்பே அவரது உடல்நிலை மோசமாக தான் இருந்ததாகவும் அவரது இறப்பில் எந்த மர்மமும் இல்லை என தெரிவித்தார். சிலரின் அரசியல் ஆசைகளால் தான் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் சில பிரச்சனைகள் எழுந்து அதிமுக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறினார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அங்கு இருந்த அரசியல் வாதிகள், அமைசார்கள், எம்.எல்.ஏகள் அரசு அதிகாரிகள் என அனைவரும் தான் அப்பல்லோவில் சாப்பிட்டனர்,அதனால் தான் அப்பல்லோவில் உணவு கட்டணம் அதிகரித்து எனக் கூறிய அவர், தற்போது இது தொடர்பாக தரங்கெட்ட தனமான பேச்சை பேச கூடாது என கண்டனம் தெரிவித்தார்.
இப்போது சசிகலாவை குற்றம்சாட்டுபவர்கள் , சசிகலாவை பொது செயலாளரை தேர்ந்தெடுத்த போது என்ன செய்தனர் என்றும் முதல்வர் என கூறிய ஓ.பி.எஸ். கோமாவிலா இருந்தார் என்றும் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர்கள் அதிமுகவை இணைக்க முயற்சி செய்து வருகிறார்கள், முறையான ஒருங்கிணைப்பு வேலை இல்லை எனவும், பொத்தாம் பொதுவாக அழைப்பு என கூப்பாடு போடுகிறார்கள், இது வெத்து அழைப்பு என தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அதிமுக இணைவதற்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக கூறிய அவர், அதற்கான முறையான உள்ளார்ந்த வேலையை ஓ.பி.எஸ் எடுக்கவில்லை என தெரிவித்தார். கட்சியை இணைக்க அழைப்பு விடுத்தால் எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை எனவும் அப்போது தெரிவித்தார்.
ஆர்.கே நகர் தேர்தலில் டி.டி.வி தினகரன் முகத்தை காட்டி ஓட்டு கேட்க 100 கோடி செலவு செய்யப்பட்டது உண்மை எனவும், 20 ரூபாய் டோக்கனை கொடுக்காவிட்டால் டி.டி.வி தினகரன் தோல்வி அடைந்து இருப்பார் எனவும் விமர்சித்தார்.தினகரன் கட்சி இன்னும் பதிவு கூட செய்யப்படவில்லை எனவும், தினகரன் கட்சியில் போட்டுள்ள 90 சதவிகிதம் பொறுப்பாளர்கள் எங்கள் சொந்தகாரர்கள் தான் எனவும் தெரிவித்தார்.