தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28-ம் தேதி சவார்க்கர் பிறந்த நாளன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருவாவடுதுறை ஆதினம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "1947 இல் சுதந்திரம் அடைந்த பிறகு ராஜாஜி, நேருஜி ஆகியோர் திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு செங்கோல் ஒன்றை கொடுக்கும்படி வேண்டி கேட்டுக் கொண்டனர். அந்த வேண்டுதலை ஏற்று திருவாவடுதுறை ஆதீனம் மூலம் 1947 ஆண்டு பண்டிதர் ஜவாஹர்லால் நேருவிற்கு தங்க செங்கோல் செய்து கொடுக்கப்பட்டது. இந்த செங்கோல் நீதி நெறி தவறாமல் நடக்க வேண்டும் என்பதற்காக தான் அப்போது 20 வது குருமா சன்னிதானம் அம்பலவாணன் ஆட்சி காலத்தில் கொதுமா மூர்த்திகள், நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் ஆகியோர் டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தங்க செங்கோலை நேருவிற்கு கொடுத்தனர். இந்த செங்கோலானது 28 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறுவப்பட உள்ளது. அருங்காட்சியகத்தில் சுமார் 75 ஆண்டு காலமாக உறங்கி கொண்டு இருந்த செங்கோலை பாராளுமன்றத்தில் வைப்பதற்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பிரதமர் நரேந்திர மோடிக்கு திருவாவடுதுறை ஆதீனம் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.
பழைய நடைமுறைகளைப் பின்பற்றி செங்கோல் வைக்கப்படுமா என்பதை பற்றி எதுவும் தெரியவில்லை. நாளைக்கு நடைபெறுவதை இன்றைக்கு சொல்ல முடியாது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து அதன் பின்பு தான் 1947 இல் சுதந்திரம் அடைந்தோம். அதன் நினைவாக தான் செங்கோல் வழங்கப்பட்டது. செங்கோலை தர்ம தேவதையாக வழிபட்டு ஆட்சி நடத்தப்பட வேண்டும். நேர்மையாக ஆட்சி நடத்த வேண்டும் என்பதற்கு தான் இந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட இருக்கிறது" என தெரிவித்தார்.