Skip to main content

டெங்கு காய்சல் பீதியில் திருவாரூர்; மூன்று பேருக்கு சிறப்பு சிகிச்சை!

Published on 24/10/2018 | Edited on 24/10/2018

 

 

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவது மாவட்டத்தில் பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

 

தமிழகத்தில் தற்போது பெய்துவரும் மழையின் காரணமாக குழந்தைகள், முதியோர்கள் என பொதுமக்களுக்கு காய்சல்கள் வரத்துவங்கியுள்ளது. திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக மாவட்டம் முழுவதிலிருந்தும்  40 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காய்ச்சலுக்கான சோதனைகள் மற்றும் டெங்கு சோதனைகள் நடத்தப்பட்டது. இதில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த டேவிட் உள்ளிட்ட மூவருக்கு டெங்கு இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த மூவரும் டெங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்களுக்கும் உரிய சிகிச்சைகள் மருத்துவர்களால் அளிக்கப்பட்டு வருகிறது. 

 

திருவாரூர்  மாவட்டம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு முன்பு, திருவாரூர் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் மருத்துவ கல்லூரி துணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கலை கண்டித்தும் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டு பரபரப்பாகிக்கொண்டிருக்கிறது. "அந்த போஸ்டரில் தமிழகமே டெங்குகாய்ச்சலும், பன்றிகாய்ச்சலும் பறவிக்கொண்டிருக்கும் நிலையில், திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் எங்கே இருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார், மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிடாமல் தூங்குவது ஏன் என்கிற கேள்விகளோடு ஒட்டப்பட்டிருந்தது.

 

இந்தநிலையில் டெங்குவால் மூன்றுபேர் அனுமதித்திருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

 

"திமுக ஆட்சியின் போது கலைஞரால் கொண்டுவரப்பட்ட மருத்துவக்கல்லூரி. அவர் இருக்கும் வரை முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது. திமுக ஆட்சி முடிந்து அதிமுக ஆட்சி வந்ததும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்டுகொள்ளாமலேயே கைவிட்டுவிட்டனர். மருத்துவகல்லூரி முழுவதுமே சுகாதாரமின்மையாக காணப்படுகிறது. எங்கு திரும்பினாலும் கழிவுநீர் குளமாகவே இருக்கிறது. அனைத்து வார்டுகளுமே அசுத்தமாகவே காணப்படுகிறது. சரியான குடிநீர் வசதியோ, கழிப்பறை வசதியோ படுக்கை வசதியோ இல்லாத, சிகிச்சைக்கு வரும் மக்கள் தரையில் படுத்திருக்கும் அவலநிலைக்கொண்ட மருத்துவக் கல்லூரியாகதான் தற்போது இருந்துவருகிறது.  

 

அதோடு மருத்துவமனையை சுற்றிலும் காடுகளை போல் புதர் மண்டிக்கிடக்கிறது. மருத்துவமனை கட்டிடத்தின் கழிவுகள் முழுவதும் மருத்துவக் கல்லூரிக்கு பின்னால் உள்ள வாய்க்காலில் வெளியேற்றப்படுவதால் கழிவுகள் தேங்கி குட்டையாக, கொசு உற்பத்தியாகும் இடமாகவே இருக்கிறது. மருத்துக்கல்லூரியே டெங்குவை உருவாக்கும் இடமாக  இருக்கிறது. அருகிலேயே மாவட்ட ஆட்சியரகம் இருந்தும் அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையே இருக்கிறது." என வேதனை படுகிறார் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கோ.சி.மணி.

 

இந்த சூழலில் சுகாதாரத்துறையை முடுக்கிவிட்டுள்ளனர், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பிலும் இன்று தொிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்