Skip to main content

திருவாரூருக்கு மட்டும் அவசரமாக இடைத்தேர்தல் நடத்துவது ஏன்?! - கி.வீரமணி 

Published on 01/01/2019 | Edited on 01/01/2019
t


திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:   தமிழ்நாடு சட்டப் பேரவையில் 20 இடங்கள் காலியாக இருக்கும்போது திருவாரூருக்கு மட்டும் அவசரமாக இடைத் தேர்தல் நடத்துவது ஏன்?    20 தொகுதி இடைத்தேர்தல் ஆட்சிக்கு எடைத் தேர்தலாக மாறும் என்பதாலா? 

‘கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை’ என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல, 20 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளன என்று தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் தேர்தல் ஆணையத்துக்கு எழுதிசில மாதங்கள் - பல வாரங்கள் ஆகிவிட்டன.

 

திருவாரூர் தொகுதிக்கு மட்டும் அவசர இடைத் தேர்தல் ஏன்?

பாதிக்கப்பட்டவர்களில் எவரும் அந்த உயர்நீதிமன்ற நீதிபதி (ஜஸ்டீஸ் சத்திய நாராயணா) தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு (அப்பீல்) ஏதும் செய்யவும் இல்லை.

 

இந்நிலையில் அவைகளுக்குத் தேர்தல் நடத்தாமல் திருவாரூருக்கு மட்டும் 2018 ஆகஸ்ட் கலைஞர் மறைவால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதில் மட்டும் தனித்த அக்கறை காட்டுவதன் நோக்கம் தான் என்ன?


பின்னது கிடக்கட்டும்; முன்னது ‘க்யூ’வை உடைத்து சில ‘குண்டர்கள்’ முன்னே வந்து நிற்கும் காட்சிபோல, திருவாரூர் இடைத் தேர்தல் 2019 ஜனவரி 28ஆம் தேதி நடைபெறும் என்று டிசம்பர் 31 மாலை அறிவித்திடும் சட்டப்படி, நியாயப்படி, ஜனநாயகப்படி 30ஆம் நாள் அவகாசம் பற்றியெல்லாம் கவலைப்படாது திடீர் அறிவிப்பின் “ரகசியம்” தான் என்னவோ! திருப்பரங்குன்றத்திற்கு - நீதிமன்றத்தில் வழக்கு இருக்கின்றது என்ற சாக்கு ‘ரெடிமேட்’ ஆயுதமும் கையில் இருக்கலாம்

 

தி.மு.க. என்றும் தயார்!

‘மழை பெய்யும் ஆகவே தள்ளி வையுங்கள்’ என்று தமிழக அரசு முன்பே தனது தலைமைச் செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியது போல இப்போது ஏதாவது கடித வேண்டுகோள் போயிருக்கிறதா? மழை புயல் முடிந்து விட்டது உடனே வையுங்கள் - என்று கடிதம் ஏதாவதுபோனதா? 

 

தி.மு.க.வைப் பொருத்தவரை அது என்றும் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறது என்பது நாடறிந்த உண்மையே!


20 தொகுதி இடைத் தேர்தல் என்பது எடைத் தேர்தலே!


 20 தொகுதிக்கு தேர்தல் வைக்காமல் இதற்கென்ன தனி அவசரம்? அவற்றையும் சேர்ந்தே வைத்தால் பல வகையில் குட்டிப் பொது சட்டமன்றத் தேர்தல் போன்று நடத்தினால், ஜனநாயகம் மேலும் காப்பாற்றப்படுவதுடன் இடைத் தேர்தல்கள் மட்டுமல்லாமல் தமிழக ஆட்சியாளருக்கு “எடைத் தேர்தல்” களாகவும் கூட உணர்த்தும் தேர்தல்களாக இருக்குமே!

 

தமிழக அரசியல் கட்சிகளே இதில் நீங்கள் மேல் நடவடிக்கையாகக் குரல் கொடுத்து, ஜனநாயகத்தை  உணர்த்துங்கள்.’’ 

 


 

சார்ந்த செய்திகள்