இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைகளில் நோய்த்தொற்றால் பாதித்தவர்களுக்குப் படுக்கைகள் கிடைக்காமல் அவதிப்பட்டுவருகின்றனர். ஒன்றிய அரசு, முதல் அலையின்போது உடனடியாக அறிவித்த முழு ஊரடங்கை இரண்டாம் அலையில் அறிவிக்காமல் உள்ளது. மாநிலங்கள் தாங்களாகவே முழு ஊரடங்கை அறிவித்து மாநில பொருளாதாரத்தையும், மாநில மக்களின் நலன்களையும் காக்க போராடிவருகிறது.
தமிழகத்திலும் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக உள்ளது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பௌர்ணமி அன்று நடைபெறும் கிரிவலம், தென்னிந்தியாவில் புகழ்பெற்றது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சுமார் 4 முதல் 5 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள்.
கரோனா பரவத் தொடங்கிய கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கிரிவலம் வருவதற்கு வருவாய் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 17வது மாதமாக கிரிவலம் வர முற்றிலும் தடை செய்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மே 25ஆம் தேதி இரவு 8 .02 முதல் மே 26 ஆம் தேதி மாலை 5.36 மணிவரை கிரிவலம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தினங்களில் கிரிவலம் வருகிறேன் என யாரும் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்று அறிவித்துள்ளார்.