திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற 74-வது சுதந்திர தின விழாவில் நடந்த சுவாரஸ்யம் இது –
திருவண்ணமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி இ.ஆ.ப., கோவிட் 19 கரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த 78 முன்களப் பணியாளர்களுக்கு கேடயம், பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். அப்போது, காவல்துறை பணியில் இரவு பகல் பாராமல் பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும்போது, இன்ஸ்பெக்டர் அல்லிராணியை மேடையில் நிற்கவைத்து, மாவட்ட ஆட்சியராகிய கந்தசாமி, பரிசு வாங்கும் இடத்தில், அதாவது கீழே நின்று சல்யூட் அடித்தார்.
அப்போது எடுத்த புகைப்படத்தை, இன்ஸ்பெக்டர் கவிதா, அல்லிராணியை தனது பேஜ்மேட் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டு ‘யாரும் எதிர்பார்க்காத மோமென்ட்’ என வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்பெக்டர் அல்லிராணி இத்தனை மரியாதைக்குரியவராக எப்படி ஆனார்?
இரண்டு மாதங்களுக்கு முன், வந்தவாசி அருகிலுள்ள நாவல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அமாவாசை, ஏரிப்பட்டு கிராமத்திலுள்ள கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி இறந்துபோனார். இதுகுறித்து தகவலறிந்த தெள்ளார் இன்ஸ்பெக்டர் அல்லிராணி விசாரணை மேற்கொண்டார். அமாவாசையின் உடலை பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தபோது, கரோனா அச்சத்தால், உடலைத் தூக்க உறவினர்கள்கூட முன்வரவில்லை. அல்லிராணியோ, ஆட்டோ டிரைவர் உதவியுடன், தானே அந்த உடலைத் தூக்கி அனுப்பிவைத்தார்.
இன்ஸ்பெக்டர் அல்லிராணியின் அந்த நேரத்து அறச்செயல், குறளொன்றை நினைவுபடுத்துகிறது –
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்
இக்குறளுக்கான விளக்கம் : இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.