2020 மார்ச் முதல் 2022 பிப்ரவரி வரை சுமார் இரண்டு ஆண்டுகள் கரோனா பரவல் காரணமாகத் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. கரோனாவின் பரவல் தன்மை குறைந்தபின் திருப்பதி திருமலையை முன்னுதாரணமாகக் காட்டி பக்தர்கள் கிரிவலம் வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என ஆன்மீகவாதிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.
மத்திய – மாநில அரசுகள் கரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக்கொண்டபின் கடந்த மார்ச் மாதம் பௌர்ணமியில் கிரிவலத்திற்கு அனுமதியளித்தது மாவட்ட நிர்வாகம். லட்சணக் கணக்கான பக்தர்கள் 14 கி.மீ சுற்றளவுள்ள மலையை வலம் வந்தார்கள்.
இந்த மாதம் சித்திரை மாதம் பௌர்ணமி ஏப்ரல் 16ஆம் தேதி விடியற்காலை 2 மணிக்குத் தொடங்கி ஏப்ரல் 17 ஆம் தேதி விடியற்காலை 1.30 மணியளவில் முடிகிறது. இரண்டு ஆண்டுகளாக சித்திரை மாத பௌர்ணமிக்குக் கிரிவலம் வர அனுமதிக்கவில்லை. இந்தாண்டு அனுமதி அளிக்கப்பட்டதால் சுமார் 25 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் தோராயமாக ஒரு மதிப்பீடு செய்துள்ளது.
இதற்காக பல முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது. அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு அமர்வு தரிசனம் செய்யப்பட்டுள்ளது. 15 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதைக்கு வருவதற்கு சிறப்பு இலவச பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 9 சாலைகளிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆட்டோக்கள் அதிகளவு கட்டணங்களைப் பெறும். அதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒருவருக்கு 10 முதல் 50 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கட்டணம் குறித்த பேனர்கள் தற்காலிக பேருந்து நிலையங்களில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அனுமதி பெற்றே குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும் எனச்சொல்லப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து பாதைகள் மாற்றப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்காக சுமார் 6 ஆயிரம் போலீஸாரை ஈடுபடுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கிரிவலம் வரும் பக்தர்களின் பொது போக்குவரத்து வாகனங்கள் குறைந்தது 2 அல்லது 3 கி.மீ தூரத்துக்கு அப்பால் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து பக்தர்களைக் கிரிவலப்பாதைக்கு அழைத்து வர ஆட்டோக்கள் கொள்ளை கட்டணத்தைக் கடந்த காலங்களில் வசூலிப்பது வாடிக்கை. ஒரு ஆளுக்கு 100 ரூபாய் எனக் கட்டணம் சொல்லி 3 பேர் பயணம் செய்யக்கூடிய ஆட்டோவில் 6 பேரை ஏற்றுவார்கள். ஷேர் ஆட்டோக்களில் 60 ரூபாய், 70 ரூபாய் எனச்சொல்லிக் குறைந்தது 10 பேரை ஏற்றுவார்கள். இதுகுறித்து பலபுகார்கள் பக்தர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டாலும் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய, நடவடிக்கை எடுக்கவேண்டிய போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து காவல்துறையினர் என யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை.
அதேபோல் லட்சணக் கணக்கான பக்தர்கள் வரும் கிரிவலப் பாதையில் எம்.ஆர்.பி விலையை விட அதிகளவில் குடிநீர், கூல்ட்ரிங்ஸ், பிஸ்கட் போன்ற பொருட்களை விற்கின்றனர். தரமற்ற உணவுப்பொருட்களையும் விற்பனை செய்கின்றனர். இதுகுறித்தும் உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. குறிப்பாக ஹோட்டல்களில் நுகர்வோர் சட்டப்படி விலைப்பட்டியல் வைக்க வேண்டும். 80 சதவீத பெரிய ஹோட்டல்களில் குறிப்பாக ஹோட்டல்கள் சங்க நிர்வாகிகளின் ஹோட்டல்களில் விலைப்பட்டியலே வைப்பதில்லை. திருவிழா காலங்களில் அவர்கள் விருப்பத்துக்கு விலையை ஏற்றி இறக்கி விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஒரு சதவீதம் கூட கண்டுகொள்வதில்லை எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
சித்திரை மாத பௌர்ணமி, கார்த்திகை தீபத்திருவிழா காலங்களில் மாவட்ட நிர்வாகம் அரசுத்துறை செய்யும் பணிகள், எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கூட்டம் போட்டு விவாதிக்கின்றனர். அங்கு எடுக்கப்படும் முடிவுகள் குறித்து 40 சதவீதத்தைக் கூட நிறைவேற்றுவதில்லை. இதனால் மேற்கண்ட ஆட்டோ கட்டணம், தரமற்ற, விலைப் பட்டியல் வைக்காமல் ஹோட்டல்கள், பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துத் தடுக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.