திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பகுதியைச் சேர்ந்த சிலர் பாஜகவில் இணைந்து, பதவி வாங்கியுள்ளனர். அப்படி வாங்கியவர்கள் மாற்றுக்கட்சியில் உள்ள சிலரை நட்பு அடிப்படையில் அழைத்து பாஜக துண்டை தோளில் போட்டு, மோடி படம் போட்ட ஒரு கார்டு தந்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டு அனுப்பியுள்ளனர்.
அப்படி போட்டோ எடுத்தவர்கள் சமூக வலைத்தளங்களில் பாஜகவில் இணைந்தவர்கள் என ஃபோட்டோவுடன் வெளியிட்டுள்ளனர்.
பெரணமல்லூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் இதுகுறித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "என்னை மிரட்டி பாஜகவில் இணைய வைத்தார்கள், நான் சேரமாட்டன்னு சொன்னதுக்கு என்னை அடிப்பேனு சொல்லி, அடிக்கவந்துட்டாங்க.
அதனால் கட்சியில் சேர்ந்துட்டேன். ஆனால், நான் சாகும்வரை என் கட்சியில் தான் இருப்பேன்" என்று கூறியுள்ளார். அவரை கட்சியில் சேர்க்கச் சொல்லி மிரட்டியது யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பெரணமல்லூர் காவல்நிலையத்தில், மகேந்திரன் சார்பில் புகார் தரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் புகார் மீது நவம்பர் 18ஆம் தேதி விசாரணை நடத்துவதாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மிஸ்டுகால் கொடுத்தால் பா.ஜ.க உறுப்பினர் என சில ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் எண் ஒன்றை விளம்பரம் செய்து, சேர்க்கையை நடத்தியது பா.ஜ.க. மத்திய அரசின் திட்டங்களில் எல்லாம் பாஜகவின் மிஸ்டுகால் எண்ணை தந்து அதற்கு கால் செய்தவர்களை எல்லாம் பா.ஜ.க உறுப்பினர்களாக்கி அதிர்ச்சி தந்து பெரும் எதிர்ப்பை சம்பாதித்தது.
தற்போது மாற்றுக்கட்சி பிரமுகர்களை மிரட்டி பாஜகவுக்கு இழுக்கிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோல் திரை நட்சத்திரங்களிடம் பணப் பேரம் பேசி பாஜகவில் இணைக்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதற்கு பாஜகவில் இருந்து முறையான பதில் வராத நிலையில், என்னை மிரட்டி பாஜகவில் இணைத்தார்கள் என்கிற திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒருவரின் நேரடி குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பா.ஜ.க தலைவர் முருகன், இன்று திருவண்ணாமலையில் வேல்யாத்திரை தொடங்கவுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பா.ஜ.க மீது வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.