திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்காவுக்கு உட்பட்ட மணிக்கல் மாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயியான 35 வயதான ராமமூர்த்தி. அதே ஊரைச் சேர்ந்தவர் விஜயசாந்தி. இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்தத் தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுள்ளார்.
கடந்த ஓராண்டாகவே கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வருமாம். இரண்டு குடும்பத்தாரும் சமாதானப்படுத்தி வாழவைத்துள்ளார்கள். இரண்டாவது குழந்தை பிறந்த பின் சண்டை அதிகமாக நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி விஜயசாந்தி, பூச்சி மருந்து குடித்துள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் அதிர்ச்சியாகி, விஜயசாந்தியை செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர் 30ஆம் தேதி மரணமடைந்துள்ளார்.
"தனது மகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள காரணம், தனது மருமகன் ராமமூர்த்தி தான். அதனால் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என விஜயசாந்தியின் தாய் ஜெயக்கொடி செங்கம் காவல்நிலையத்தில் புகார் தந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் செப்டம்பர் 30ஆம் தேதி போலீஸ் ஜீப்பில் ராமமூர்த்தியை விசாரணைக்காக அழைத்து வரச்சென்றுள்ளனர். அப்போது, ராமமூர்த்தியின் குடும்பத்தார் அவரை அழைத்துச் செல்லக்கூடாது என போலீசிடம் வாக்குவாதம் செய்தனர்.
அவர்களை எச்சரித்துவிட்டு ராமமூர்த்தியை ஜீப்பில் ஏற்றியதும், இறந்த விஜயசாந்தியின் உறவினர்கள், அவனை எங்களிடம் ஒப்படையுங்கள் என போலீஸ் ஜீப்பை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். அந்த ஜீப்பை அங்கிருந்து செல்லவிடாமல் தடுக்க போலீஸார் "சட்டம் எல்லாவற்றையும் பார்ததுக்கொள்ளும், தவறு செய்துயிருந்தால் சட்டப்படி தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம்" எனச்சொல்லி சமாதானப்படுத்திவிட்டு காவல்நிலையம் அழைத்து வந்தனர்.
கடந்த இரண்டு தினங்களாக விசாரணை நடைபெற்றுவருகிறது. அதேநேரத்தில் திருமணமாகி 3 வருடங்களே ஆனதால், இந்தத் தற்கொலை தொடர்ப்பாக ஆர்.டி.ஓ விசாரணை நடைபெறுகிறது.