கரோனா உலகம் முழுவதும் பெரும் பொருளாதார சேதத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்திவிட்டு முதல் அலை ஓய்ந்துவருகிறது. இன்னும் கரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீண்டும் கரோனா இரண்டாவது அலை உருவாகியுள்ளது என்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவில் முதல் அலை ஓரளவு அடங்கியுள்ள நிலையில், இந்த நவம்பர் இறுதி முதல் இரண்டாவது அலை தொடங்கும் எனவும் மருத்துவ உலகம் கூறுகிறது.
கரோனாவால் இதுவரை இந்தியாவில் 85.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சராசரியாக தினமும் 45 ஆயிரம் பேர் கரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்படுகிறார்கள். தினமும் 500 பேர் என்கிற அளவில் இறக்கின்றனர். இதுவரை இந்தியாவில் 1.27 லட்சம் பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் 7.5 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது தினமும் 2,500 பேர் அளவுக்கு கரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இதுவரை தமிழகத்தில் கரோனாவால் 11,324 பேர் இறந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 17,962 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 265 பேர் இறந்துள்ளனர். இன்னும் சிகிச்சையில் 347 பேர் உள்ளனர். தினசரி 1,500 பரிசோதனைகள் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. தினமும் 25 பேருக்கும் குறையாமல் நோய் பரவிவருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 250 பேர் என இருந்த எண்ணிக்கை, இப்போது 25 ஆக குறைந்துள்ளது. திருவண்ணாமலை மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. அதற்குக் காரணம் சமூக விழிப்புணர்வு.
தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகரங்களில் மக்கள் பொருட்களை வாங்கக் குவிகின்றனர். துணிக்கடை, மளிகைக்கடை, நகைக்கடை என எங்கும் தனிமனிதர்களுக்கு இடையிலான இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. கிருமிநாசினிகளை தெளிப்பதில்லை. மக்களிடம் அலட்சியம் உருவாகியதன் விளைவாக மீண்டும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயரத் துவங்கியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மாதம் 20 பேர், 30 பேர் என இருந்த தினசரி கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக உயருவதும், குறைவதுமாக உள்ளது. கடந்த நவம்பர் 8ஆம் தேதி மட்டும் 41 பேருக்கு கரோனா வந்துள்ளது. இப்படியிருக்கும் நிலையில் தமிழகத்தின் மிகப் பிரபலமான திருவிழாக்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை நடத்த வேண்டும் என்கிற குரல் அதிகரிக்க துவங்கியுள்ளன.
கார்த்திகை தீபத்திருவிழா…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மலை உச்சியில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம் என்பது புகழ்வாய்ந்தது. கொடியேற்றத்துடன் துவங்கும் முதல்நாள் தீபத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்துகொள்வார்கள். பின்னர் ஒவ்வொரு நாள் திருவிழாவின் போதும் படிப்படியாக பக்தர்களின் எண்ணிக்கை உயர்ந்து, 10ஆம் நாளான மகாதீபத்தன்று 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை நகரத்தில் குவிந்திருப்பர். இந்த தீபத்திருவிழாவைக் காண தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இருந்தும் தென்னிந்தியா முழுவதுமிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்கு வந்து தங்கி, 10 நாள் கலந்துகொண்டு ரசித்துவிட்டுச் செல்வார்கள். ஆயிரக்கணக்கான வியாபாரிகளும் இந்த நகரத்தில் வந்து கடை விரிப்பார்கள்.
வரும் நவம்பர் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்குகிறது. 29ஆம் தேதி காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகாதீபம் மலை உச்சியிலும் ஏற்றப்படவுள்ளது.
கரோனா விதிகள் நடைமுறையில் இருப்பதால் இந்தாண்டு தீபத்திருவிழாவை சிம்பிளாக கோவில் பிரகாரத்திலேயே நடத்திவிடலாம் என மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்துடனும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை செய்தது. இதனை அறிந்துகொண்ட இந்து சமய அமைப்பினர், தீபத்திருவிழாவை பிரமாண்டமாக நடத்தியே தீரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு கோரிக்கை விடுத்துவருகின்றன. வழக்கம்போல் தீபத்திருவிழா நடத்த வேண்டும். அதில் மக்கள் கலந்துக்கொள்ள வழி செய்ய வேண்டும் என மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து அரசுக்குக் கோரிக்கை விடுக்க அழுத்தம் தருகின்றனர், கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் தனுசு, டி.வி.எஸ்.ராஜாராம், வர்த்தக சங்க பிரமுகர் ராமசந்திர உபாத்யா போன்றவர்களும்.
கடிதம் எழுதிய திமுக எம்.எல்.ஏ
திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு மா.செவுமான எ.வ.வேலு, தீபத்திருவிழா தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உலக ஆன்மிகத் தலைநகராகவும், குறிப்பாக சைவத்தின் தலைநகராகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறும் நாட்கள் நெருங்கிவருகிறது. ஆனால், அதற்கான முன்னேற்பாடுகள் ஏதும் நடைபெறவில்லை. எனவே கரோனா பெருந்தோற்று பரவிவரும் இச்சூழலில் கார்த்திகை தீபத்திருவிழா வழக்கம் போல் நடைபெறுமா என்ற கவலை ஆன்மீக நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கும், திருவிழா உபயதாரர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
நகர பொதுமக்கள், ஆன்மிக பக்தர்கள், விழா உபயதாரர்கள் முன்னாள் அறங்காவலர்கள் என பலபேர் என்னைத் தொடர்பு கொண்டு திருவிழா நடைபெற வேண்டுமென வலியுறுத்தினார்கள்.
இந்தியாவில் பெரிய ஆன்மிகத் திருவிழாவான பூரி ஜகன்நாதர் கோவில் திருவிழா, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடைபெற்றது. அதேபோல் நமது தமிழகத்தில் தஞ்சைப் பெருவுடையார் கோவில் ஐப்பசி மாத அன்னா அபிஷேக விழாவும், ராஜராஜசோழன் பிறந்த சதய நட்சத்திர திருவிழாவும், குலசேகரப் பட்டினத்தில் உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழாவும், சென்ற வாரம் மதுரை அம்மாபட்டி ஏழு ஊர் முத்தாலம்மன் கோவில் திருவிழாவும் நடைபெற்றுள்ளது.
இந்தத் திருவிழாக்களைப் போன்று அரசு அறிவிக்கும் கட்டுப்பாடுகளையும், கரோனா பெருந்தோற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்களையும், சமூக இடைவெளியையும் பின்பற்றி தாங்கள் நடந்துகொள்வதாகவும், எனவே இந்த ஆண்டு தீபத்திருவிழாவும், மாடவீதியில் 10 நாட்கள் சாமி திருவீதி உலாவும் வழக்கம் போல் நடைபெற நடவடிக்கை எடுத்திட கோரிக்கை வைத்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, நானும் மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம், அறநிலையத்துறை அதிகாரிகளை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, கார்த்திகை தீபத்திருவிழா வழக்கம் போல 10 நாட்கள், சாமி திருவீதிவுலாவோடு விழா நடைபெற நடவடிக்கை எடுக்கும்படி பேசி வருகிறேன். சம்மந்தப்பட்ட அலுவலர்கள், துறை அமைச்சர், முதலமைச்சர் ஆகியோரிடம் கலந்து பேசி வழக்கம் போல் திருவிழா நடைபெற நடவடிக்கை எடுத்துவருதாகக் கூறுகின்றனர்.
எனவே அருணை நகர பொதுமக்கள், ஆன்மிகப் பெருமக்கள், உபயதாரர்கள் முன்னாள் அறங்காவலர்கள் ஆகியோர் வேண்டுகோளை ஏற்று கரோனா பெருந்தோற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளிகளைக் கடைப்பிடித்தும், பொதுமக்கள் அவரவர் குடியிருக்கும் பகுதியில் இருந்தும், இல்லங்களில் இருந்தபடி சாமியை வணங்குவதற்கும், கார்த்திகை தீபத்தன்று மலையின் உச்சியில் தீபத்திருவிளக்கு ஏற்றிடவும், தமிழக அரசும், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
எச்சரிக்கை தரும் சமூக ஆர்வலர்கள்...
இந்து மக்களுக்கு எதிராக திமுக உள்ளது என்கிற திட்டமிட்ட பிரச்சாரத்தால் தீபத்திருவிழாவை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வந்ததும், தேர்தலை மனதில் கொண்டு, வழக்கம் போல் திருவிழா நடத்த வேண்டும் என திமுக எம்.எல்.ஏ அரசுக்கு கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் வேலு.
கரோனா பெருந்தொற்று இன்னும் முடியவில்லை. முதல் அலையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இரண்டாவது அலை மேலை நாடுகளில் தொடங்கிவிட்டது. இதனால் அந்த நாடுகள் மீண்டும் பொதுமுடக்கம் அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளன. நவம்பர் இறுதியில் இந்தியாவில் இரண்டாவது அலை தொடங்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்கே மக்கள் வெளியே வரவேண்டாம், சிம்பிளாக கொண்டாடுங்கள் என பல தரப்பில் இருந்தும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துவருகின்றனர். இந்நிலையில், தீபத்திருவிழாவை வழக்கம் போல் நடத்த வேண்டும் என தி.மு.க சார்பில் கேட்பது எந்த விதத்தில் சரியானது ?
வழக்கமான திருவிழா என்பது கொடியேற்றம் துவங்கிய முதல் நாள் முதல் தினசரி 10 நாட்களும் கோயிலுக்குள் இருந்து காலை, இரவு என இரண்டு முறை சுவாமி மாடவீதியுலா வரும். இதனைக் காண உள்ளுர், வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பகலில், இரவில் வந்து மாடவீதி முழுவதும் நிரம்பி சுவாமியின் வீதியுலாவைக் காண்பார்கள்.
வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளிரதம், மகாரதம் என்கிற தேரோட்டம் போன்ற நாட்களில் லட்சங்களில் மக்கள் கூட்டம் வரும். மகாரம் இழுக்க மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேவைப்படுவர். மேலும், தீபத்திருவிழா அன்று சுமார் 15 முதல் 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள், மலையேறுவார்கள். அதன்பின் மலையில் தீபம் எரியும் 11 நாட்களும் ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலம் வருவார்கள். இதுதான் வழக்கமான திருவிழா. இப்படியொரு திருவிழா இந்தப் பெருந்தொற்று காலத்தில் நடத்தினால் வரும் பக்தர்களை விடுங்கள், விழா நடத்தும் வயதானவர்கள் உடல் நலன் என்னவாகும் என்பதை யோசிக்க மறுப்பது சரியா?
ஆந்திராவில் பள்ளிகளைத் திறந்தார்கள், அதில் சுமார் 200 குழந்தைகளுக்கு மேல் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டம் கூடினால் நிச்சயம் உடல் பலகீனமாவர்களை நோய்த் தாக்கும் என்பது உறுதி. இது ஒருநாள் மட்டும் கூடிவிட்டுக் கலைவதாக இருந்தால் பரவாயில்லை. 10 நாளும் நகரத்துக்கு கூட்டம் வரும், அப்படி வருபவர்களில் 1 சதவிதம் பேருக்கு நோய் இருந்தாலும் அது திருவிழாவுக்கு வரும் குழந்தைகள், முதியவர்கள் எனப் பெரும்பான்மை மக்களுக்குப் பரவ வாய்ப்பு அதிகம்.
தமிழகத்தில் திருவிழாக்கள் நடைபெற்ற கோயில்கள் ஒருநாள் விழாவோடு முடிந்து போயின. தீபத்திருவிழா என்பது 10 நாள் நடைபெறும் விழா. வெளி மாவட்ட, வெளிமாநில பக்தர்களை திருவண்ணாமலை நகருக்கு வராமல் தடுத்தாலும் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்த பட்சம் 2 முதல் 4 லட்சம் மக்களாவது திருவிழாவைக் காண குவிவார்கள். இதனால் மாவட்டத்தில் நோய்ப் பரவல் அதிகமாகுமே தவிர குறையாது. அதனால் வழக்கமான திருவிழா நிகழ்வுகளுக்குப் பதில் அதில் ஒரு மாற்றத்தை இந்தாண்டு கொண்டு வரவேண்டும்.
திருப்பதியில் ஏழுமலையான் உற்வசத்தில் மாற்றம் செய்திருந்தார்கள். பக்தர்களை அனுமதிப்பதிலும் கட்டுப்பாடுகளை வைத்துள்ளார்கள். 10 வயது குழந்தைகள், 65 வயது பெரியவர்களை திருமலையில் அனுமதிப்பதில்லை. காரணம் நோய் வேகமாக அவர்களைத் தாக்கும் என்கிற மருத்துவர்களின் அறிவுறுத்தலால் தான் இந்த நடைமுறையை வைத்துள்ளனர்.
அதேபோல் திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் காலை, இரவு சுவாமி மாடவீதியுலா வருவதை நிறுத்தி, கோயில் வளாகத்துக்குள்ளேயே சாமி அலங்காரம், பூஜை செய்து பொதுமக்கள் கலந்துகொள்ளாமல் விழாவை நடத்தி முடிக்க வேண்டும். மாடவீதியுலா, தேரோட்டம் என்பதை இந்தாண்டு நிறுத்திவிட்டு, பரணி தீபம், மகா தீபம் மட்டும் ஏற்றலாம். இந்த விழாக்கள் கட்டளைதாரர்கள், உபயதாரர்கள் உதவியுடன் நடைபெறும் விழா, அதில் அவர்கள் கலந்துகொள்ள அனுமதித்தே ஆக வேண்டும் என்றால் கோவில் பிரகாரத்தில் எவ்வளவு பேர் பிடிக்கும் என்பதைக் கணக்கெடுத்து அந்தளவுக்கு மட்டும் அனுமதிக்க வேண்டும். பக்தர்கள், மக்கள் வருகையைத் தவிர்க்க கார்த்திகை தீபத்திருவிழாவை தொலைக்காட்சிகள், கோவில் இணையதளம் மூலமாக நேரலை செய்ய வைத்து அதன்வழியாகப் பக்தர்கள், பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வழி செய்துவிடலாம். அதைவிட்டுவிட்டுக் கோயில் திருவிழாவை நடத்தியே ஆக வேண்டும் என்பது சரியல்ல என்கிறார்கள்.
அரசுக்குச் சென்றுள்ள அறிக்கை…
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓர் அறிக்கை தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், திருவிழா குறித்த தகவல்கள், பக்தர்கள், பொதுமக்களின் எண்ணிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள், மருத்துவர்கள் எச்சரிக்கை, மாவட்டத்தில் கரோனா நிலவரம் குறித்த தகவல்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அரசு என்ன முடிவெடுக்கிறதோ அதன்படி மாவட்ட நிர்வாகம் நடந்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
என்ன செய்யப்போகிறார்கள் ஆட்சியார்கள்?
கரோனா காலத்தில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை அரசியல் ஆதாயத்துக்காகச் செயல்பட வைத்ததோடு, திட்டமிடல் எதுவுமில்லாமல் அதனைத் திடீரென மூடியதால் அங்கிருந்த தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் பயணமாகி வடதமிழகம் முழுவதும் கரோனா பரப்ப காரணமாகினர், இதனால் அதிக பாதிப்பும், உயிர் பலியும் ஏற்பட்டன.
தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு இந்துத்துவா நெருக்கடிகளுக்காக பக்தர்களின் விருப்பம் முக்கியம் என முடிவெடுக்கப்போகிறதா? அல்லது மக்கள் உடல்நலன் முக்கியம் என முடிவெடுக்கப்போகிறதா? எதற்கு முக்கியத்தும் தரப்போகிறது அரசு?