இந்தியாவில் 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேதியில் மதுரை சித்திரை திருவிழா நடைபெறுகிறது. அதனால் மதுரை தொகுதிக்கான தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இதுப்பற்றி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதசாகு.
இந்நிலையில் இதுப்போன்ற பிரச்சனை திருவண்ணாமலை தொகுதிக்கும் ஏற்பட்டுள்ளது. திருவ ண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலம் புகழ்பெற்றது. ஒவ்வொரு கிரிவலத்துக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்துக்காக வருவார்கள். சித்திரை மாத பௌர்ணமியன்று மட்டும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள்.
இந்த ஆண்டு சித்திரை மாத பௌர்ணமி, ஏப்ரல் 18ந்தேதி இரவு 7 மணிக்கு தொடங்கி மறுநாள் ஏப்ரல்19ந்தேதி மாலை 5 மணி வரை உள்ளது. இதனால் ஏப்ரல் 18ந்தேதி இரவு கிரிவலம் வருவது உகந்தது என கூறப்படுகிறது.
திருவண்ணாமலை, ஆரணி இரண்டு தொகுதிக்கான வாக்குப்பெட்டிகள் திருவண்ணாமலை நகரில் உள்ள சண்முக மேல்நிலைப்பள்ளியில், ஒழுங்கு விற்பனைக்கூடம் இரண்டு இடங்களில் நடைபெறுகிறது. இந்த இரண்டு இடங்களும் கிரிவலப்பாதையில் உள்ளன. இதனால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலால் மாவட்ட நிர்வாகம், சிக்கலை தீர்க்க என்ன செய்யலாம் என ஆலோசனை நடத்திவருகிறது.