திருவண்ணாமலை நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். திருவண்ணாமலை நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் வருகின்றது.
கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் திருவண்ணாமலை குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2- ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. திருவண்ணாமலையில் மக்கள் கி.மு 1 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே நகரமைத்து வாழ்ந்து வருகின்றனர். இது "மதுரை" நகரினைவிட பழமையானது என்று சிலரால் கூறப்படுகிறது.
கி.பி. 4- ஆம் நூற்றாண்டு முதல் 9- ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் முக்கிய நகரமாக விளங்கிய திருவண்ணாமலை, கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் திருவண்ணாமலை நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அறிய முடிகின்றது. சங்க இலக்கிய நூலான பரிபாடலிலும் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பதஞ்சலி முனிவரின் நூலிலும், பத்துப்பாட்டு தொகுப்பில் ஒரு நூலாகிய "மலைபடுகடாம்'' என்ற நூலில் இம்மாவட்டத்தில் உள்ள பர்வதமலை பற்றியும் அதனை உள்ளடக்கிய செங்கம் பகுதியை ஆண்ட நன்னன் என்ற குறுநில மன்னனின் வீரத்தையும், கொடைத்தன்மையையும், மலை வளத்தையும், மக்கள் வாழ்க்கை பற்றியும், விரிவாக எழுதப்பட்டுள்ளது.
பிற்காலத்தில் இந்நிலப்பகுதி பல்லவர்கள், இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள், விஜயநகரப் பேரரசர்கள்,ஆற்காடு நவாப்கள், திப்பு சுல்தான், பிரிட்டிஷார் என பலரின் ஆளுகையின் கீழ் இருந்துள்ளது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் முக்கிய நகராக விளங்கியது. பழம்பெருமை வாய்ந்த சைவத் திருமுறைகளால் நினைத்தாலே முக்தி தரும் என்று புகழப்படுகின்ற, மகான்கள் பலர் வாழ்ந்த ஆசிரமங்கள் நிறைந்த புனிதத் தலம் எனப் போற்றப்படும் திருவண்ணாமலை நகரமே இம்மாவட்டத்தின் தலைநகரமும், பெரிய நகரமும் ஆகும்.
திருவண்ணாமலை 1866ல் மூன்றாம் படிநிலை நகராட்சியாக இருந்தது. 1946ல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டு, 1971ல் முதல் நிலை நகராட்சியாக உருவானது. வேலூர் வடாற்காடு மாவட்டத்தை 30.9.1999ல் இரண்டாகப் பிரிக்கப்பட்டு திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என தமிழகத்தின் முதல்வராக இருந்த திமுக தலைவர் கலைஞர் உருவாக்கினார். இது 1996ல் திருவண்ணாமலை மாவட்டம் எனப் பெயர் பெற்றது. 6191ச.கி.மீ பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மேலும் நிர்வாக வசதிக்காக ஆரணி, செங்கம், செய்யார், போளூர், தண்டராம்பட்டு, திருவண்ணாமலை, வந்தவாசி, கலசம்பாக்கம், கீழ்ப்பென்னாத்தூர், ஜமுனாமருதூர் என பத்து வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
வட தமிழகத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தினை கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டமும், தெற்கே விழுப்புரம் மாவட்டமும், மேற்கே தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டமும் வடக்கே வேலூர் மாவட்டமும் சூழ்ந்து உள்ளது. இங்கு பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. அவற்றுள் குறிப்பிடதக்கது ஆரணி. நகரத்தின் மையப்பகுதியில் பிற்கால சோழமன்னராகிய சம்புவராயரால் கட்டப்பட்ட அகழியுடன் கூடிய கோட்டை. நம் நாட்டை ஆளும் ஆசையுடன் இங்கு வந்த பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாட்டுப் படைகளுக்கு இடையே 1756 முதல் 1763 வரை போர் நடந்தது. இப்போர் இந்திய வரலாற்றில் மூன்றாவது கர்நாடகப்போர் என குறிப்பிடப்படுகிறது. அந்த போர் நடைபெற்ற இடம் வந்தவாசி. தற்போது இக்கோட்டையின் சில பகுதிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. இக்கோட்டை நுழைவு வாயில் பகுதியில் போரில் பயன்படுத்திய பீரங்கியும் உள்ளது. இந்தக் கோட்டையிலிருந்து செஞ்சிக் கோட்டைக்கு செல்லும் வகையில் சுரங்கப்பாதை ஒன்று இருந்ததாகக் கூறப்படுகிறது.
செய்யாறு அருகே ஜடேரி கிராமத்தின் நிலத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் மண்ணில்தான் நாமக்கட்டி செய்யப்படுகிறது. இவை வைணவ தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.