திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள களம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியநாதன் (வயது 68). இவரது மனைவி பிரபாவதி. இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஐந்து பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவர், ஊட்டியில் உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். பின்னர் தனது சொந்த ஊருக்குச் சென்றவர், அங்கிருந்து திடீரென தலைமறைவானார். அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில்தான், கடந்த நாற்பது வருடங்களுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு வந்த பாக்கியநாதன், அங்கேயே தங்கிவிட்டார். இவரை இப்பகுதி மக்கள் பிச்சை சித்தர் என்றே அழைப்பர்.
பொதுவாக திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள வெள்ளை விநாயகர் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலைகளில் சுற்றித் திரிவார். ஆனால், யாருடனும் பேசமாட்டார். யார் எது வாங்கிக் கொடுத்தாலும் வாங்கி சாப்பிட மாட்டார். மூக்குப்பொடி கொடுத்தால் மட்டும் வாங்கிக்கொள்வார். கடைகளுக்குச் சென்று சாப்பிட வேண்டும் என எதையாவது கேட்டால், கடைக்காரர்கள் கொடுத்துவிடுவார்கள்.
இவரால் அப்பகுதியில் யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாது. நீண்ட தலைமுடியுடன் காலில் செருப்பில்லாமல் அழுக்குப் படிந்த காவி வேட்டி சட்டையுடன் அப்பகுதிகளில் சுற்றித் திரிவார். அப்பகுதியில் இருக்கும் கடை வாசல்களில் படுத்துக்கொள்வார். இவரிடம் தெய்வ சக்தி உள்ளதாகவும் பிச்சை சித்தர் தங்களை அடித்தால் கஷ்டங்கள் நீங்கிவிடும் எனக் கூறி பொதுமக்கள் அடிக்கடி இவரைக் காண்பதற்காக வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் வந்து ஆசிவாங்கிச் செல்வதும் வழக்கம்.
அதோடு பக்தர்கள் விருப்பப்பட்டு பணத்தையும் போட்டுவிட்டு போவார்கள். ஆனால், அதை எடுக்க மாட்டார். இவர் திண்டுக்கல்லில் இருப்பதை அறிந்த அவரது மனைவியும் மகள்களும் வந்து அழைத்தும், ஊர் செல்ல விரும்பாமல் திண்டுக்கல்லிலேயே தங்கிவிட்டார். இவருக்கென்று பக்தர்கள் கூட்டமே உண்டு. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக பிச்சை சித்தருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு எழுந்திருக்க முடியாமல் கடை வாசலிலேயே படுத்துவிட்டார். இந்தத் தகவல் அறிந்த இவரது மனைவி, மகள்கள் இவரை தங்களது ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக 07.05.21 அன்று திண்டுக்கல் வருகை தந்தனர்.
ஆனால், இவரை இங்கிருந்து அழைத்துச் செல்லக்கூடாது என கூறி பக்தர்கள் அவரது மனைவி, மகள்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வேறு வழியின்றி சித்தரின் மனைவி பிரபாவதி திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரை சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், இதற்குப் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் பாதுகாப்பு வழங்கி அழைத்துச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தார்.
இதன்பேரில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர், பிச்சை சித்தரை அழைத்து செல்ல ஏற்பாடு செய்தனர். இதனிடையே சித்தருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தகவல் திண்டுக்கல் நகர் முழுவதும் தீ போல் பரவியது. இதனையடுத்து அவரது பக்தர்கள் ஏராளமானோர் அவரை கடைசியாக காண்பதற்காக திண்டுக்கல் மெயின் ரோட்டிற்கு வந்தனர். இதனால் அங்கு பெரும் கூட்டம் கூடியது. இதையடுத்து, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அங்கு வந்த பக்தர்களைத் திருப்பி அனுப்பினர்.
ஒரு கட்டத்தில் சித்தரைக் காண ஏராளமானோர் அவரைச் சுற்றி கூடினர். காவல்துறையினர், அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பெரும் போராட்டத்திற்குப் பின்பு சித்தரை காரில் அனுப்பி வைத்தனர். ஆனால், மறு நாளான இன்று (10.05.2021) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள களம்பூர் கிராமத்தில் மூக்குப்பொடி சித்தர் சித்தர் மறைந்தார் அதைக் கேள்விப்பட்டு திண்டுக்கல்லில் உள்ள பக்தர்கள் பலர் கண்ணீர்விட்டு அழுதனர். பெரும்பாலான பக்தர்கள் சோகத்தில் மூழ்கினர். அதோடு சித்தரை திண்டுக்கல் கொண்டுவந்து ஜீவசமாதி செய்ய தேவையான நடவடிக்கைகளையும் பக்தர்கள் எடுத்து வருகிறார்கள். இச்சம்பவம் திண்டுக்கல் நகர் மாநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.