Skip to main content

ஆசிரியரை தாக்க முயன்ற மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநீக்கம்

Published on 21/04/2022 | Edited on 21/04/2022

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு  தாவரவியல் ஆசிரியராக பணிபுரிபவர் சஞ்ஜெய். இவர் கடந்த பிப்ரவரி மாதம்  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இருந்து பணிமாறுதல் பெற்று மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக பணியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

 

கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி காலை பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாரி என்ற மாணவன், பொது தேர்வு நெருங்கி வரும் நிலையில் தாவரவியல் ஆசிரியர் செய்முறை தேர்விற்காக கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடத்தை சமர்பிக்கும் படி கூறியுள்ளார். அப்பொழுது  மாரி என்ற மாணவன் ஆசிரியர் முன்னரே  வகுப்பறையில் பாய் போட்டு படுத்துள்ளான், இதனை ஆசிரியர் கண்டித்தபோது, ஆசிரியரை தகாத வார்த்தைகளில் பேசி, தாக்க முயன்றுள்ளான்.

 

இதனை சக மாணவர்களான யோனோ, செல்வகுமார் ஆகியோர்  செல்போனில் அதனை பதிவு செய்த நிலையில் அந்த வீடியோ ஏப்ரல் 20 ஆம் தேதி மாலை முதல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது,

 

இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம் மற்றும் ஆம்பூர் வட்டாட்சியர் பழனி பள்ளி தலைமையாசிரியர் வேலன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. அந்த மாணவன் அதிக அளவு ஆபாசமாக பேசியதும், ஆசிரியருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஈடுப்பட்டது உறுதியானது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மாரி, செல்வகுமார், யோனோ  ஆகிய மூன்று மாணவர்களை பள்ளியிலிருந்து  தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய கோட்டாச்சியர் கல்வித்துறைக்கு உத்தரவிட்டார்.

 

இதனைத் தொடர்ந்து அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு  மாணவர்கள் சமூகத்தில் ஒழுக்கமாக வளர வேண்டும் என கோட்டாட்சியர் அறிவுரை வழங்கினார். இச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை  மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினார். இன்று காலை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பள்ளி தலைமையாசிரியர் வேலன், மூன்று மாணவர்களை தற்காலிகமாகப் பள்ளிக்கு வர அனுமதியில்லை என உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 24 லட்சம் பறிமுதல்; பறக்கும் படை அதிகாரிகள் தீவிரம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவர் தனியார் வங்கியிலிருந்து ரூ 14 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை எடுத்துகொண்டு திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம் -ல் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார். அப்போது வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஷோபனா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்ற பாலாஜியை நிறுத்தி சோதனை செய்த போது அவருடைய பையில் வைத்திருந்த  ரூ.14.54 லட்சம் பணம் இருப்பது கண்டறிந்தனர். அவர் எடுத்து சென்ற பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால்  அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஷோபனா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை  வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அஜித்தா பேகத்திடம் ஒப்படைத்தனர்.

Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே குழு ஏ பறக்கும் படை அலுவலர் வினோதினி தலைமையில் சோதனை செய்த பொழுது, திருப்பத்தூர் அடுத்த திம்மனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் கோவிந்தராஜ் என்பவர் முறையான ஆவணம் இன்றி  காரில் சுமார் 9,32,400 ரூபாய் ரொக்க பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் கடன் வாங்கிய நபரிடம் திரும்ப கொடுப்பதற்காக எடுத்துக் கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

தேர்தல் விதிமுறைப்படி தனி நபர் ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாயை பறக்கும் படை அலுவலர் வினோதினி கருவூலத்தில் ஒப்படைக்க சென்றபோது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் 23 லட்சத்தை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

பாஜக ரோட் ஷோவில் விதிமீறல்; கோவையில் எழுந்த சர்ச்சை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Violation at BJP road show; Controversy in Coimbatore

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோயம்புத்தூர் வந்திருந்த பிரதமர் மோடி ரோட் ஷோவில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் நடைபெற கலந்துகொள்ள இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தற்பொழுது கூட்டணியில் இணைந்திருக்கும் பாமக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த பாஜக நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குற்றச்சாட்டுக்கு காரணமாகியது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் விசாரணை நடத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.