மகனுக்கு சரியாக முடிவெட்டவில்லை என்று சலூன் கடைக்கு பூட்டுப்போட முயன்ற காவலரின் செயல் அப்பகுதியில் உள்ள மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த நேவிஸ் பிரிட்டோ என்ற காவலரின் மகன் முடி வெட்டுவதற்காக அப்பகுதியில் உள்ள சலூன் கடை ஒன்றுக்கு சென்று முடியை வெட்டிவிட்டு வீட்டுக்கு வந்து உள்ளார். சலூன் கடையில் இருந்தவர் முடியை சரியாக வெட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் காவலர் தனது மகன், மனைவி ஆகியோரை அழைத்துக் கொண்டு சலூன் கடைக்குச் சென்றுள்ளார். ஆனால் அப்போது சலூன் கடையில் மகனுக்கு முடி வெட்டிய கடைக்காரர் இல்லாததால் ஆத்திரமடைந்த காவலர் நேவிஸ் பிரிட்டோ கடைக்காரரை தொடர்புகொண்டு அவதூறாகப் பேசியுள்ளார். மேலும் கடையின் ஷட்டரை மூடி கடையை பூட்டு போட முயன்றுள்ளார்.
இந்த சம்பவத்தின் காட்சிகள் அப்பகுதியில் உள்ளவர்களின் மூலமாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக சலூன் கடைக்காரர் காவலர் நேவிஸ் பிரிட்டோ மீது அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வள்ளியூர் போலீஸ் டி.எஸ்.பி காவலர் நேவீஸ் பிரிட்டோவை ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.