
திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி விழாவில் கரோனா கட்டுப்பாடுகள் முறையாக அமல்படுத்தப்படுவதாக, புதுச்சேரி அரசு தெரிவித்ததை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், மீதமுள்ள நாட்களிலும் முழுவதுமாகப் பின்பற்ற அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தது.
கரோனா ஊரடங்கு விதிகள் உள்ளதால், டிசம்பர் 27- ஆம் தேதி முதல் பிப்ரவரி 12- ஆம் தேதி வரை, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்குள், 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த கரோனா பரிசோதனை சான்றிதழை பக்தர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து சிங்காரவேலன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ‘கரோனா சான்று தேவையில்லை. பக்தர்களுக்கு உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்துவிட்டு அனுமதிக்க வேண்டும். அறிகுறிகள் இல்லாத பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவுப்படி கரோனா தடுப்பு விதிகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, பிப்ரவரி 12- ஆம் தேதி வரையிலான மீதமுள்ள நாட்களிலும் கரோனா தடுப்பு விதிகளை முழுமையாகப் பின்பற்றும்படி புதுச்சேரி அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.