Skip to main content

திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து! உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு

Published on 19/09/2017 | Edited on 19/09/2017
திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து! உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு

திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கின்றது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஈழப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கடந்த மே 29 அன்று தமிழக காவல்துறை சிறையிலடைத்தது. தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து, குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில் அவர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கின்றது.

திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் மீதான வழக்கில் அவர்கள் விரைவில் விடுதலையாகக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு வழக்கை அரசுத் தரப்பு இழுத்தடித்து வந்த நிலையில், இன்றைக்கு உயர்நீதிமன்றம் அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்துள்ளது. 

தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், சமூக விரோதிகளை கைது செய்து அதன் மூலம் அமைதியை நிலைநாட்டுவதற்காக குண்டர் தடுப்புச் சட்டம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது. ஆனால், அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுபவர்களை ஒடுக்குவதற்காக இதுபோன்ற சட்டங்களை தமிழக அரசு பயன்படுத்துவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டிய நிலையில், தொடர்ந்து நீதிமன்றங்கள் தமிழக அரசின் அடக்குமுறைக்கு எதிராக தீர்ப்புகளை அளித்து வருகின்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இப்போது திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக சமூகத்தில் நிலவும் அவலங்களுக்கு எதிராக போராடுபவர்களையும், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையை காக்க போராடுபவர்களையும், மக்கள் நலனைக் காக்க அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து போராடுபவர்களையும் குண்டர் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை கொண்டு அரசு ஒடுக்கி வருகின்றது. குறிப்பாக இளம் சமூக செயற்பாட்டாளர்களை காவல்துறை மூலம் அரசு முடக்கி வருகின்றது. மக்கள் நலனுக்காக போராட முனைபவர்களை மறைமுகமாக எச்சரிக்கும் விதத்தில் அரசு இதுபோன்ற அடக்குமுறைகளை சமீபகாலமாக கையாண்டு வருகின்றது.

அடக்குமுறை மூலம் ஜனநாயக போராட்டக் குரல்களை ஒடுக்க முற்படுவதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் குண்டர் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை அரசு திரும்பப் பெற வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்