மனு தர்ம நூல் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமூக வலைதளத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மகளிர் குலத்தை இழிவுபடுத்தும் மனுஸ்மிருதியை தடைசெய்ய வலியுறுத்தியும், மனு தர்ம நூலை தடை செய்யக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக அவர்கள் போராட்டத்திற்கு நாற்காலிகள் அமைக்க முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய விடுதலை சிறுத்தை கட்சியினர் அனுமதி பெற்று தான் அந்த போராட்டத்தை நடத்துகிறோம் எனக்கூறி நின்றபடியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் பேசுகையில், மகளிரையும், மகளிர் குலத்தையும் இழிவுபடுத்தும் மனு தர்மத்தை தடைசெய்ய வேண்டும். இணையவழி கருத்தரங்கில் 40 நிமிடங்கள் ஆற்றிய உரையில் 40 நொடியை துண்டித்து எனக்கு எதிராக பேசுகின்றனர். இது நான் செப்டம்பர் 27ஆம் தேதி பேசிய பேச்சு. இவர்களின் நோக்கம் என்னை இழிவுபடுத்துவது அல்ல திமுக கூட்டணியைஉடைக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். நான் பேசிய முழுமையான பேச்சை பெண்கள் கேட்க வேண்டும். பெண்களை இழிவுபடுத்தி விட்டதாக அபாண்டமாக பழி சுமத்துகின்றனர் என்றார்.