‘ஜெய் பீம்’ திரைப்படம், இருளர் மக்களின் துயர வாழ்வைக் காட்சிப்படுத்தியது. இந்தப் படத்தைப் பார்த்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது மனதைப் பாதித்துவிட்டது எனத் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி இருளர், குறவர் இனமக்கள் வாழும் பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், அரசின் நலத்திட்டங்கள் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தைப் பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், 'கலைநாயகன்' சூர்யா அவர்களின் சமூகப் பொறுப்புணர்வுடன்கூடிய தொண்டுள்ளத்தை, தொழில் அறத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உளமாரப் பாராட்டுகிறோம் என்று தெரிவித்திருந்தார்.
திருமாவளவனின் பாராட்டுக்குப் பதிலளித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா, "தங்கள் வாழ்த்தும் பாராட்டும் மன நிறைவை அளித்தன. கவன படுத்துவது மட்டுமே கலைப்படைப்பின் மூலம் சாத்தியம். உண்மையான சமூக மாற்றங்களை அரசும், அரசியல் இயக்கங்களும் மட்டுமே உருவாக்க முடியும்" என தெரிவித்திருந்தார். இந்நிலையில், சூர்யாவின் அறிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ள திருமாவளவன், "கலைநாயகன் சூர்யா அவர்கள், பழங்குடியினரின் உரிமைப்போராளி முண்டா பிறந்தநாளில் எமக்கு நன்றி மடல் விடுத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. பொறுமையும் சகிப்புத்தன்மையும்தாம் போராளிகளுக்கான பாதுகாப்புக் கவசங்கள். போராளி சூர்யாவுக்கு எமது வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த படம் தொடர்பாக பலரும் நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், வன்னியர் இன மக்களை அவமானப்படுவிட்டதாக கூறி வன்னியர் சங்கம் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. அதில் 5 கோடி நஷ்டஈடு கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.