மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விவசாயிகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக குடியரசு தினத்தன்று, மாபெரும் ட்ராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் 22.01.2021 அன்று இரவு, சிங்கு எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாய சங்கத் தலைவர்கள், முகமூடி அணிந்த ஒருவரைப் பிடித்து பத்திரிகையாளர் முன் நிறுத்தியதோடு, விவசாய சங்கத் தலைவர்களைக் கொலை செய்யவும், போராட்டத்தை சீர்குலைக்கவும் சதி நடப்பதாக குற்றம் சாட்டினர்.
26ஆம் தேதி நடக்கும் ட்ராக்டர் பேரணியின்போது போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்த தங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிடிப்பட்ட அந்த நபர் தெரிவித்தார். மேலும், தன்னைத் தவிர இரண்டு பெண்கள் உட்பட மேலும் ஒன்பது பேர் போராட்டத்தில் ஊடுருவியுள்ளதாகவும் தெரிவித்தார். அந்த நபரை ஹரியானா போலீஸார் விசாரித்தனர். அதேவேளையில் அவர் பேசிய மற்றொரு வீடியோ வெளியானது அதில், ‘எனக்கு மது ஊற்றிக்கொடுத்தும், அடித்தும் விவசாய சங்கத்தினர் பேச வைத்தனர். மேலும் அப்படி பேசவில்லை என்றால் என்னை கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டினர்’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வி.சி.க. தலைவர் திருமாவளவன், “நாளை இலட்சக்கணக்கான டிராக்டர்கள் அணிவகுக்கும் மாபெரும் பேரணியை விவசாயிகள் புதுடெல்லியில் நடத்தவிருக்கிறார்கள். அவர்களைக் கலைக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டால், உலக அளவில் இந்தியா வெட்கித் தலை குணியும் நிலை ஏற்படும். ஒருதுளி இரத்தம் சிந்தினாலும், துப்பாகிச்சூடு நடுத்துகிற சத்தம் கேட்டாலும் அதற்கு மோடி அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.