விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ’’தமிழகத்தைப் பாலைவனமாக்கும் தீய நோக்கத்தோடு மத்தியில் ஆளும் மோடி அரசால் துவக்கப்படும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்' நடத்தும் மனிதசங்கிலிப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை கிழக்குக் கடற்கரை முழுவதும் கடலிலும், நிலத்திலும் நூற்றுக்கணக்கான ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான உரிமங்களை அம்பானியின் ரிலையன்ஸ் , வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு வழங்கியுள்ளது. கார்ப்பரேட் முதலாளிகள் இலட்சக்கணக்கான கோடி ரூபாய் இலாபம் ஈட்டக்கூடிய இந்தத் திட்டங்களால் நிலவளமும் நீர்வளமும் அழியும். மீன்பிடித் தொழிலும், விவசாயமும் பெருமளவில் பாதிக்கப்படும். குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படும்.
இந்த பேரழிவுத் திட்டங்களை எதிர்த்து ஏற்கனவே விவசாய அமைப்புகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . பேரழிவுக்கு எதிரான பேரியக்கத்தின் சார்பில் ஜூன் 12ம் தேதி மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலிருந்து ராமேஸ்வரம் வரை 596 கிலோமீட்டர் தொலைவுக்கு மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நலன் காக்கும் இந்தப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன், கடலோர மாவட்டங்களைச்சார்ந்த விடுதலைச்சுறுத்தைகள் கட்சியினர் பெருமளவில் இப்போராட்டத்தில் பங்கேற்கிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஹைட்ரோ கார்பன் திட்டங்களை புதுச்சேரி மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில முதல்வர் கூறியிருப்பது போல தமிழக முதலமைச்சரும் உறுதியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.’’