திருச்செங்கோடு அருகே, பொதுவெளியில் மது அருந்திய பட்டியல் சமூக இளைஞர்கள் இருவர் எழுந்து நின்று பதில் சொல்லாததால், அவர்களை சரமாரியாக தாக்கிய மாற்று சமூகத்தைச் சேர்ந்த 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த மல்லசமுத்திரம் அருகே உள்ள அவினாசிப்பட்டியில் அருந்ததியர் தெருவைச் சேர்ந்த செங்கோடன் மகன் வெற்றிவேல் (36). இவருடைய உறவினர் சின்னுசாமி மகன் ராஜமாணிக்கம் (40).
இவர்கள் இருவரும் கடந்த 4ஆம் தேதி இரவு, அவினாசிப்பட்டி அருகில் உள்ள வண்டிநத்தம் சின்ன ஏரி பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது வண்டிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமூக இளைஞர்களான கேசவன், பிரகாஷ், அருள், சத்தியமூர்த்தி, விக்னேஷ்குமார், அருள்குமார், கார்த்திக் உள்ளிட்ட 8 பேர் அங்கு வந்துள்ளனர்.
அவர்கள், வெற்றிவேல், ராஜமாணிக்கம் ஆகிய இருவரையும் இங்கு வந்து ஏன் மது குடிக்கிறீர்கள்? எனக் கேட்டு கண்டித்துள்ளனர். அதற்கு வாலிபர்கள் இருவரும் கீழே அமர்ந்தபடியே துடுக்குத்தனமாக பதில் சொன்னதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள், 'ஏன்டா... கேள்வி கேட்டால் ஒழுங்கா எழுந்து நின்று பதில் சொல்ல முடியாதா...?' என்றதோடு, அவர்களை சாதியைச் சொல்லி இழிவுபடுத்தியுள்ளனர். மேலும், இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். மறுநாள் காது வலியால் துடித்த வெற்றிவேல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். பரிசோதனையில், அவருடைய இடப்பக்க காது ஜவ்வு கிழிந்து, இரைச்சல் தொந்தரவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
தங்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாதிக்கப்பட்ட வாலிபர்கள் இருவரும் மே 5ஆம் தேதி எலச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்கள் புகார் அளித்ததை அறிந்துகொண்ட எதிர்தரப்பைச் சேர்ந்த கேசவன் மனைவி வித்யா என்பவரும் பதிலுக்கு அவர்கள் மீது புகார் அளித்தார். அந்தப் புகாரில், சம்பவத்தன்று இரவு, வெற்றிவேலும் ராஜமாணிக்கமும் மது போதையில் தன்னை தகாதமுறையில் பேசியதோடு, கீழே தள்ளி தாக்கினர் என்றும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருந்தார்.
இரு தரப்பு புகார்களையும் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யாமல் தொடர்ந்து கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 5 நாட்கள் கழித்தே, அதாவது மே 10ஆம் தேதிதான் இருதரப்பு புகார்களின் மீதும் எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்துள்ளனர்.
வெற்றிவேல் அளித்த புகாரின்பேரில் (வழக்கு எண்: 243/2021), வண்டிநத்தத்தைச் சேர்ந்த கேசவன், பிரகாஷ், அருள், சத்தியமூர்த்தி, விக்னேஷ்குமார், அருள்குமார், கார்த்தி உள்ளிட்ட 8 பேர் மீது இ.த.ச. பிரிவுகள் 147, 294 (பி), 341, 323, 355 மற்றும் வன்கொடுமைத் தடுப்புச்சட்டப் பிரிவுகள் 3 (1) (எஸ்), 2 (2) (விஏ) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர். எதிர்தரப்பு சார்பில் வித்யா அளித்த புகாரின்பேரில் வெற்றிவேல், ராஜமாணிக்கம் ஆகியோர் மீது இதச 294 (பி), 323, 354, 506 (1) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, இருதரப்பைச் சேர்ந்த அனைவருமே திடீரென்று தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து வெற்றிவேல், ராஜமாணிக்கம் தரப்பில் அவினாசிப்பட்டியைச் சேர்ந்த திமுக பிரமுகர் முருகேசன் கூறுகையில், ''சம்பவம் நடந்த அன்று எங்கள் தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரும் மது அருந்தியிருந்தால் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பியிருக்கலாம். ஆனால் எழுந்து நின்று பதில் சொல்லவில்லை என்பதற்காக, அவர்களைக் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அத்தோடு சாதி பெயரைச் சொல்லி, உங்களுக்கு கொழுப்பும் திமிரும் அதிகமாகிவிட்டது என்றெல்லாம் இழிவுபடுத்தியுள்ளனர்.
நாங்கள் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் அளித்ததால், வேண்டுமென்றே எங்கள் பசங்க மீதும் பொய் புகார் அளித்துள்ளனர். எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்த பிறகும், எதிர்தரப்பினர் சார்பில் பலர் எங்களிடம் வழக்கை வாபஸ் பெறும்படியும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகவும் தொடர்ந்து டார்ச்சர் செய்கின்றனர்.
நாங்கள் இந்தப் பிரச்சினையில் சட்டப்படி எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். உண்மையிலேயே தவறு செய்தவர்களைக் கைது செய்யாமல் அவர்களைத் தப்பவைக்க காவல்துறையினர் உடந்தையாக இருக்கின்றனர்'' என்றார்.
இதுகுறித்து எலச்சிப்பாளையம் காவல் நிலைய காவல்துறை தரப்பில் கேட்டபோது, ''இருதரப்பும் அளித்த புகாரின்பேரில் முதற்கட்டமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் யாருக்கும் பாரபட்சமாக நடக்கவில்லை. விசாரணையின் அடிப்படையில், பொய்ப் புகார் கொடுக்கப்பட்டது தெரியவந்தால், அந்தப் புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர். ரத்து செய்யப்படும்'' என்றனர்.