விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ளது காவேரிப்பாக்கம். இங்கிருந்து ஆலப்பாக்கம் செல்லும் சாலையில் பச்சையம்மாள் என்ற 70 வயது மூதாட்டி ஒருவர், கடந்த 17 வருடங்களாக டிபன் கடை நடத்திவருகிறார். இந்தக் கடையில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், கூலித்தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் இருந்து நகரத்திற்குப் பல்வேறு பணிகளுக்காக வரும் ஏழை எளிய மக்கள், பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் காலை உணவு சாப்பிடுகின்றனர்.
வெளியிலும் வாங்கிச் செல்கின்றனர். காரணம், ஒரு இட்லி இரண்டு ரூபாய் என மலிவு விலையில் மூதாட்டி பச்சையம்மாள் விற்பனை செய்துவருகிறார். இவர் அளிக்கும் டிபன் சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் இருப்பதால் பலரும் பச்சையம்மாள் டிபன் கடையைத் தேடிவந்து சாப்பிடுவதாக தெரிவிக்கின்றனர்.
இதை அறிந்த திண்டிவனம் டி.எஸ்.பி. கணேசன், நேற்று (19.08.2021) அந்த மூதாட்டியின் கடைக்குச் சென்று மூதாட்டி பச்சையம்மாளுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்ததோடு, அங்கு டிபன் சாப்பிட வந்த வாடிக்கையாளர்களுடன் அவரும் அமர்ந்து டிபன் சாப்பிட்டு, மூதாட்டி பச்சையம்மாளுக்கு ஊக்கத்தை அளித்துள்ளார். காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், தன் டிபன் கடைக்குத் தேடிவந்து டிபன் சாப்பிட்டது பச்சையம்மாளுக்கு பெரும் சந்தோஷத்தை அளித்துள்ளது.