மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் 'அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு' எனத் தலைப்பிடப்பட்ட அதிமுக மாநாடு நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்காக மூன்று நாட்களுக்கு முன்பாகவே உணவு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. ஒன்று, இரண்டு, மூன்று என சுமார் 300 கவுண்டர்களில் உணவுகள் தொண்டர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதற்கான வெங்காயம் உரித்தல் மற்றும் காய்கறிகளை வெட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்காக அக்கம்பக்கம் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண்மணிகள் வந்திருந்தனர். இப்படி தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் மாநாட்டில் உணவு டன் கணக்கில் சமையல் கூடத்திலேயே கீழே கொட்டப்பட்ட நிகழ்வு உண்மையிலேயே பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
எவ்வளவோ ஏழை எளிய மக்கள் ஒருவேளை உணவு கூட இல்லாமல் ஏங்கித் தவிக்கும் நேரத்தில் இப்படி சமைத்த உணவை கீழே கொட்டியுள்ளது தங்களுக்கே பெரும் மனக் கஷ்டத்தை தருவதாக அங்கு சமையல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களே அதிருப்தி தெரிவித்துள்ளனர். உணவு ஒப்பந்ததாரரோ, சாம்பார் சாதம் சூடாக கிடைத்ததால் மாநாட்டுக்கு வந்தவர்கள் அதைமட்டும் சாப்பிட்டுவிட்டு புளியோதரையை விரும்பி சாப்பிடவில்லை. காலையில் பாத்திரங்களை எடுக்க வந்தபோது இவ்வளவு உணவு கீழே கொட்டப்பட்டு கிடந்தது எனத் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தின் அருகிலேயே இப்படி சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் வகையில் உணவுக் கழிவுகள், பாக்குமட்டை தட்டுகள் கிடப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. குறைந்தபட்சம் அதிமுக மாநாடு ஏற்பாட்டாளர்கள் மீதமான உணவை அக்கம் பக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பியிருந்தால் கூட பிரயோஜனப்பட்டிருக்கும். அல்லது அதை முறையாக அகற்றியிருக்கலாம் இப்படி விழா பந்தலிலேயே கொட்டிவிட்டுச் செல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல எனக் குரல்கள் எழுந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ''எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு போனால் தாய் உள்ளத்தோடு சென்றவர்கள் காபி குடித்துவிட்டு தான் செல்ல வேண்டும் என வற்புறுத்தக் கூடிய மனிதநேயத்திற்கு சொந்தக்காரர். அதனால் உணவில் அவர்கள் தனிக்கவனம் செலுத்தினார்கள். பார்த்து பார்த்து செய்தார்கள். ஆனால், மாநாட்டின் வெற்றியை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், மாநாட்டின் சிறப்பையும், எடப்பாடி பழனிசாமியின் பேச்சையும் உலகம் கொண்டாடி வரும் நிலையில், கரும்புள்ளியாக இதை வைத்து சிலர் மகிழ்ச்சி அடைகிறார்கள். 10 லட்சம் பேருக்கு ஆக்கிய உணவில் எல்லோருக்கும் வழங்கப்பட்டதற்கு பிறகு பாத்திரம் பண்டங்களை எடுத்து கொண்டு செல்கின்ற பொழுது மிச்சம் மீதியாக அங்கங்கு சிதறி கிடந்த காட்சிகளை எடுத்துக்காட்டி மிகைப்படுத்தி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது வேதனை அளிக்கிறது. எங்கேயோ புளியோதரை சிந்தி கிடந்தது என்று சொல்லி அதை மிகைப்படுத்தி காட்டுகிறார்கள். இந்த சூழ்ச்சிகள் எல்லாம் எடுபடாது. என்றார்.
ஆனால் உண்மை நிலவரத்தில் உணவு வீணாக்கப்பட்டது குறித்த தகவல்கள் வெளியாகி பல தரப்பில் இருந்து அதிருப்திகள் கிளம்பிய நிலையில் அங்கு வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உணவு கழிவுகளை அகற்றும் பணியை ஆய்வு செய்தார். ஆர்.பி. உதயகுமார் சொன்னபடி ஆங்காங்கே சிதறிக்கிடந்த சிறு உணவுகள் ஜேசிபியில் குழிதோண்டி புதைக்கப்பட்டது.