விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ளது இடையஞ்சாவடி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் 42 வயது ராதாகிருஷ்ணன். இவர் முந்திரி பருப்பு வியாபாரம் செய்து வருகிறார். பல்வேறு பகுதிகளிலிருந்து முந்திரிப்பருப்பை வாங்கி சென்னையில் உள்ள தனியார் கம்பெனிக்கு அனுப்பி வருகிறார் ராதாகிருஷ்ணன். இந்த நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த திருப்பதி எக்ஸ்போர்ட் கம்பெனியின் உரிமையாளர்கள் விஜயகுமார், கோவிந்தராஜ் ஆகிய இருவரும் ராதாகிருஷ்ணனை தொடர்புகொண்டு தங்கள் கம்பெனிக்கு முந்திரிப் பருப்பு வாங்கி அனுப்புமாறு நேரில் சந்தித்து ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு நேரடியாக வந்துள்ளனர் கோவிந்தராஜ், விஜயகுமார் ஆகிய இருவரும்.
ஒரு கிலோ முந்திரிப் பருப்பு 540 ரூபாய் விலையிலும் அடுத்து 450 ரூபாய் விலையிலும் என இருவிதமான விலையில் இரண்டு ரக முள்ள 185 கிலோ முந்திரிப்பருப்பை 6 லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். இதற்காக ராதாகிருஷ்ணனிடம் அவர்கள் ஒரு லட்சம் ரூபாய் மட்டும் முன்பணமாக கொடுத்துவிட்டு மீதமுள்ள 3 லட்சத்தி 97 ஆயிரம் ரூபாயை தங்களது கம்பெனி பெயரில் உள்ள நிதி நிறுவனத்தின் பெயரில் காசோலை எழுதி கொடுத்து விட்டுச் சென்றுள்ளனர். மேலும் மீதி ஒரு லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பணத்தை விஜயகுமாரின் வங்கிக் கணக்கில் இருந்து ராதாகிருஷ்ணன் வங்கிக் கணக்கு பரிமாற்றம் மூலம் அனுப்புவதாக கூறி விட்டுச் சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி விஜயகுமார், கோவிந்தராஜ் ஆகிய இருவரும் கொடுத்து விட்டுச் சென்ற காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என திரும்பி வந்துள்ளது.
இதையடுத்து ராதாகிருஷ்ணன் திருப்பதி எக்ஸ்போர்ட் கம்பெனி உரிமையாளர்கள் கோவிந்தராஜ், விஜயகுமார் ஆகியோரிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது கோவிந்தராஜ் தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியில் தான் மாநில தலைவராக இருப்பதாகவும், விஜயகுமார் மாநில செயலாளராகவும் இருப்பதால் எங்கள் மீது புகார் கொடுத்து எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து ராதாகிருஷ்ணன் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் விஜயகுமார், கோவிந்தராஜ் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு டி.எஸ்.பி ரவீந்திரன் இருதயராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று மேற்படி இருவரையும் கைது செய்துள்ளனர்.