சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் இந்த புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கிறது. பரந்தூர் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பரந்தூர் மக்களின் எதிர்பார்ப்பானது விளை நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது, அதேபோல் பூர்வ குடிகளாக இருக்கும் தங்களுடைய வீடுகளையோ, மனைகளையோ எந்த வகையிலும் பாதிக்காத அளவில் விமான நிலையம் வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ''விவசாய நிலத்தை எடுப்பது தவிர வேறு வழியே இல்லை. ஒரு விதத்தில் நாம் என்ன நினைக்கிறோம் சென்னையில் இன்னும் பரவலாக விமான போக்குவரத்து அதிகரிப்பது மூலமாக அன்னிய செலாவணியை ஈட்ட முடியும், பொருளாதாரத்தில் வளர முடியும் என்பதாக அனைவருடைய கருத்தும் இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது இப்பொழுது இருக்கின்ற மீனம்பாக்கம் விமான நிலையம் என்பது 2029 பின் முழு கட்டுப்பாடு முடிந்து விடுகிறது. பக்கத்தில் இருக்கின்ற பெங்களூர், ஹைதராபாத்தில் வளர்ச்சி கூடுதலாக போய்க்கொண்டே இருக்கிறது. இதையெல்லாம் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது நமக்கு இன்னொரு விமான நிலையம் அவசியமாக தேவைப்படுகிறது. படாளம், பன்னூர், திருப்போரூர், பரந்தூர் இந்த நான்கு இடங்களில் எதாவது ஒன்றில்தான் கடைசியாக விமான நிலையத்தை அமைக்கலாம் என்று அரசு முடிவு எடுத்துள்ளது.
பன்னூரில் அதிகமான வீடுகள் குடியிருப்புகள் பாதிக்கப்படுகிறது. பன்னுரையும் பரந்தூரையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பரந்தூரில் குறைந்த குடியிருப்புகள் தான் பாதிப்புக்குள்ளாகிறது. இதனால்தான் பரந்தூரை எடுப்பது என்று அரசாங்கத்தின் சார்பில் முடிவெடுக்கப்பட்டு நிலத்தை கையகப்படுத்தலாம் என்ற அடிப்படையில் அந்த இடத்தை தேர்வு செய்து இருக்கிறோம். விமான நிலையத்தை ஒட்டி இருக்கக்கூடிய பகுதிகளில்தான் அந்த கிராமத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு எடுக்கப்பட்ட நிலத்திற்கான மாற்று இடத்தை தேர்வு செய்து ஒப்படைப்பதோடு, மட்டுமல்லது எடுக்கப்பட்ட நிலத்திற்கான பணத்தையும் கொடுக்கப் போகிறோம். இந்த விமான நிலையத்தால் சென்னைக்கு வருகிற நெரிசல் கூட்டத்தைக் குறைக்க முடியும்'' என்றார்.