
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஒவ்வொரு மாநிலத்திலும் தேவைக்கேற்ப ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பின்னர் தளர்வுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டுவருகிறது. முதல் அலையில் இல்லாத வகையில் கரோனா இரண்டாம் அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது.
இதன் காரணமாக ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. அதன்படி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையும் ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கப்பட்டது. இந்நிலையில், தமிழநாட்டிற்கு ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஆலையை மூட வேண்டிய அவசியமில்லை என தமிழ்நாடு மருத்துவதுறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ''தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய அவசியம் இல்லை. முழுமையாக கரோனா குறைந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலை குறித்து முடிவெடுக்கப்படும். நேரம் வந்ததும் புதிய சுகாதாரத்துறை அமைச்சரை டெல்லியில் சந்திப்போம்'' என தெரிவித்துள்ளார்.