திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த பால்நாங்குப்பம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கரோனா காலகட்டத்தில் மாவட்டம் முழுவதும் சிறப்பாகப் பணியாற்றிய முன்களப் பணியாளர்களுக்கு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பாராட்டு விழா நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சிவன்அருள், எஸ்.பி. விஜயகுமார், மருத்துவர்கள், சித்த மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், கல்வித்துறை, மகளிர் திட்டம் என அரசுத் துறை சார்ந்த முன்களப் பணியாளர்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அமைச்சர் கே.சி. வீரமணி பாராட்டுக்கள் தெரிவித்து பரிசுப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர்கள் மத்தியில் பேசும்போது, “தமிழக முதல்வர் கரோனா தொற்று பாதிப்பைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டதின் பேரில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றைத் தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து துறை அதிகாரிகளின் பங்களிப்பும், முன்களப் பணியாளர்களின் ஒத்துழைப்பும் இருந்ததால்தான் கரோனாவைக் கட்டுப்படுத்த முடிந்தது. குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் முற்றிலுமாக கரோனா இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதற்காக முன்களப் பணியில் இறங்கி பணியாற்றிய அனைத்து துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து முன் களப்பணியாளர்கள் அனைவரையும் பாராட்டி நன்றி தெரிவிப்பதில் கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனாவே இல்லை என அமைச்சர் பேசினாலும், தினமும் 3 பேருக்குக் குறையாமல் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை குறைக்கப்பட்டுவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.